சிறுவர்களுக்கு பைக் கொடுத்தால்... சிறை; புதுச்சேரி பெற்றோர்களே உஷார்
புதுச்சேரி: புதுச்சேரியில், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் லைசன்ஸ் இல்லாமல் பைக்குகளில் அசூர வேகத்தில் பறப்பது தொடர்கதையாக உள்ளது. அதுபோல, 18 வயதுக்கு குறைவான சிறுமிகளும் டூ வீலர்களை ஓட்டுகின்றனர்.தங்கள் பிள்ளைகள் ஓட்டும் பைக்குகளின் பின்னால் பெற்றோரும் உட்கார்ந்து கொண்டு ஜாலி ரைடு செல்கின்றனர். மைனர் வயதில் உள்ள தங்கள் பிள்ளைகள், சட்டத்துக்கு விரோதமாக பைக் ஓட்டுவதை, விபரீதம் புரியாமல், பெருமிதத்துடன் பார்த்து ரசிக்கின்றனர்.உயரமும் கிடையாது உடல் பலமும் இல்லைகுறிப்பாக, 12 வயதில் இருந்து, 15 வயதுக்குள் உள்ள சிறுவர்களுக்கு பைக் தருகின்றனர். இந்த வயது சிறுவர்களுக்கு, பைக் ஓட்டுவதற்கு தேவையான உயரம் இருப்பதில்லை. பைக்கை கட்டுப்படுத்துவதற்குரிய உடல் பலமும் இவர்களுக்கு கிடையாது.மேலும், போக்குவரத்து நெரிசலை சமாளித்து ஓட்டு அளவுக்கு தேவையான லாவகமும், முதிர்ச்சியும் இவர்களிடம் இல்லை.பக்கத்து வீட்டு பிள்ளைகளும், எதிர் வீட்டு பிள்ளைகளும் பைக் ஓட்டுவதை பார்த்து, விபரீதம் புரியாமல் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கும் பெற்றோர்கள் பைக் வாங்கி தருகின்றனர். இது, பைக் ஓட்டுவதற்கான வயதும் கிடையாது; பைக் ஓட்ட கற்று கொள்வதற்கான வயதும்கூட கிடையாது.குறிப்பாக, பிள்ளைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்பினால் மாதம் 2500 ரூபாய், 3000 ரூபாய் செலவாகிறது. இப்போது எல்லாம் தெருவுக்கு தெரு, மூலைக்கு மூலை, கூவி கூவி லோன் தருவதால், பிள்ளைக்கு லோனில் பைக் வாங்கி தரலாம், ஆட்டோவுக்கு தருகின்ற கட்டணத்தை இ.எம்.ஐ., - ஆக (மாதாந்திர தவணை) செலுத்தி கடனை அடைத்து விடலாம் என பெற்றோர்கள் கணக்கு போடுகின்றனர்.மோட்டார் வாகன சட்டத்தை பற்றி கவலைப்படாமலும், தெரியாமலும் பெற்றோர்களே ஊக்கப்படுத்துவதால், நகரத்து வீதிகளில் சிறார்கள் எந்த பயமும் இல்லாமல் பைக்கில் வலம் வருகின்றனர். ஆரம்பத்தில் பெற்றோர் கண்காணிப்பில் பைக்கை எடுக்கும் சிறுவர், சிறுமிகள், பிறகு வீட்டில் பெற்றோர் இல்லாத நேரங்களிலும், பெரியவர்களுக்கு தெரியாமலும் பைக்கை எடுத்து கொண்டு சிட்டாக பறக்கின்றனர்.விபத்து ஏற்பட்டால் விபரீதமாகி விடும் பைக் ஓட்டுவது சிறார்களுக்கு மட்டுமல்ல, சாலையில் செல்லும் மற்றவர்களுக்கு பேராபத்து என்பது பெற்றோர்களுக்கு தெரியுமா? மோட்டார் வாகன சட்டம், குறிப்பாக, புதிய மோட்டார் வாகன சட்டம் என்ன சொல்கிறது என்பதை பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் பிள்ளைகளின் எதிர்காலம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படும். சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பும் ஏற்படும்.மோட்டார் வாகன விதிமுறைப்படி பைக் ஓட்ட வேண்டுமெனில், 18 வயது நிறைவடைய வேண்டும். 2019 சட்டப்பிரிவு 199(ஏ)-ன் படி உரிய ஓட்டுநர், பழகுநர் உரிமம் பெறாமல் பைக் ஓட்டும் சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரே அனைத்துக்கும் முழு பொறுப்பு என தெள்ளத் தௌிவாக கூறப்பட்டுள்ளது.'எங்களுக்கு எதுவும் தெரியாது... எங்களுக்கு தெரியாமல் பைக்கை எடுத்து சென்று விட்டான்... சின்ன பையன் தெரியாமல் செஞ்சிட்டான்...' எனக் கூறி பெற்றோர்களால் தப்பித் துவிட முடியாது. லைசென்ஸ் இல்லாத சிறார்களுக்கு பைக் கொடுத்தற்காக பெற்றோர் அல்லது பாதுகாவலர், வாகன உரிமையாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம், 3 ஆண்டு சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது.மேலும், விபத்து ஏற்படுத்திய பைக்கின் பதிவும் ஓராண்டிற்கு ரத்து செய்யப்படும். அப்புறம் புதிதாக வாகனத்தை பதிவு செய்ய வேண்டி இருக்கும். அதேபோல் வாகனத்தை ஓட்டிய சிறார்கள் 25 வயது வரை லைசென்ஸ் எடுக்க முடியாது.எனவே, சிறார்கள் பைக் ஓட்டுவதை அனுமதிக்கும் பெற்றோர்களுக்கு, விபத்து ஏற்பட்டு விட்டால் தான் வலி புரியும்.போலீஸ், கோர்ட், வழக்கு, வாய்தா என ஒவ்வொரு மாதமும் அலையும்போது பெற்றோருக்கு, 'ஏன்டா இந்த பைக்கை வாங்கி கொடுத்தோம்...' என்று, நினைத்து தங்களை தாங்களே நொந்து கொள்ள வேண்டி இருக்கும்.கோர்ட் படிக்கட்டு ஏற வேண்டுமா ? விபத்தை ஏற்படுத்திய சிறுவர்களுக்கு சம்மன் உள்ளிட்ட கோர்ட் நடைமுறைகள் அனைத்தும் புதுசாக இருக்கும். இது, அவர்களுக்கு தேவையற்ற அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும். படிக்கும் வயதில் சிந்தனையை திசை திருப்பிவிடும்.எனவே, பிள்ளைகளை பற்றிய எதிர்கால கனவுகளுடன் இருக்கும் பெற்றோர், சிறார்களை பைக் ஓட்ட அனுமதிக்க வேண்டாம். இதுபோன்ற விபத்து வழக்கில் எல்லா நடைமுறையும் கோர்ட்டில் தான் பெற்றோர் சந்திக்க வேண்டி இருக்கும்.அபராத பணத்தையும் கோர்ட்டிற்கு சென்று தான் கட்ட வேண்டும். பொதுவாக, லைசென்ஸ் இல்லாமல் சிறார்கள் பைக் ஓட்டினால், பெரிய விபத்து அல்லது சிறிய விபத்து என்றெல்லாம் பார்ப்பதில்லை.விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் சிறாரை கைது செய்து அபராதமும், தண்டனையும் விதிக்கப்படலாம். தேவைப்பட்டால் பைக்கும் பறிமுதல் செய்யப்படும். எனவே, பெற்றோர்கள் விபரீதத்தை புரிந்து கொள்வது நல்லது.