உள்ளூர் செய்திகள்

சென்னையில் பிப்ரவரியில் தேசிய தமிழ் அறிவியல் மாநாடு

சென்னை: தமிழ்நாடு அறிவியல் சங்கம் மற்றும் சிஎஸ்ஐஆர்- கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (SERC) இணைந்து நடத்தும் தேசிய தமிழ் அறிவியல் மாநாடு 2026, வரும் பிப்ரவரி 20 முதல் 22 வரை சென்னையில் உள்ள சிஎஸ்ஐஆர் - எஸ்இஆர்சி மையத்தில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டின் கருப்பொருள் “அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நிலையான வளர்ச்சி” என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் மொழி வாயிலாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க உருவாக்கப்பட்ட இந்த தனித்துவமான தளம், நாட்டின் பல்வேறு அறிவியல் துறைகளில் முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இதில் புகழ்பெற்ற அறிவியலாளர்கள், கல்வியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.இம்மாநாட்டிற்கான முன்னோட்ட நிகழ்ச்சி 2025 நவம்பர் 12 அன்று சிஎஸ்ஐஆர்- எஸ்இஆர்சி மையத்தில் நடைபெற்றது. இதில் ஆலோசகர் எஸ். பாரிவள்ளல் வரவேற்புரையாற்றினார். விஞ்ஞான பாரதி தென்மண்டல செயலாளர் ஆர். அப்கா, மாநாட்டின் கருத்தை விளக்கினார். சிஎஸ்ஐஆர் - சிஎல்ஆர்ஐ முன்னாள் இயக்குநர் டாக்டர் பி. சந்திரசேகரன், இம்மாநாட்டின் நோக்கத்தை எடுத்துரைத்தார். சிஎஸ்ஐஆர் - எஸ்இஆர்சி இயக்குநர் டாக்டர் என். ஆனந்தவள்ளி அதிகாரப்பூர்வ சுவரொட்டியையும் மாநாட்டின் இணையதளத்தையும் வெளியிட்டார். தமிழ்நாடு அறிவியல் சங்க துணைத்தலைவர் டாக்டர் வி. பார்த்தசாரதி நன்றி தெரிவித்தார்.பாரம்பரிய அறிவை நவீன அறிவியல் சிந்தனையுடன் இணைக்கும் நோக்கில் நடைபெறும் இந்த மாநாட்டில் சிஎஸ்ஐஆர், ஐஐடி, இஸ்ரோ, மற்றும் முன்னணி பல்கலைக்கழகங்களின் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று தங்கள் ஆய்வுகளைப் பகிரவுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்