உள்ளூர் செய்திகள்

அமெரிக்க கட்டுரை ‘காப்பி’ : பல்கலை., இணையதளம் முடக்கம்

திருநெல்வேலி: அமெரிக்க பல்கலையின் கட்டுரையை காப்பியடித்து பேராசிரியர் ஒருவர் தனது பெயரில் வெளியிட்டதால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இணையதளம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தகவல் தொழில் நுட்ப துறையின் தலைவராக இருப்பவர் கிருஷ்ணன்(45). இவர் 2005ம் ஆண்டில் அதே துறையில் ‘ரீடர்’ பொறுப்பில் இருந்தார். பேராசிரியராக பதவி உயர்வு பெற பல்கலைக்கழக மானியக்குழுவிடம் ‘ரிமோட் சென்சிங்’ என்ற தலைப்பு உள்பட 5 கட்டுரைகளை சமர்ப்பித்தார். அவர் அமெரிக்காவின் பெர்டியூ பல்கலைக்கழக நான்கு பேராசிரியர்கள் 1995ல் வெளியிட்ட கட்டுரையை தனது பெயரில் வெளியிட்டிருந்தார். இதுகுறித்து அமெரிக்க பேராசிரியர்கள் பெர்னாட் எங்கல் உள்ளிட்டவர்கள் தமிழக கவர்னர் பர்னாலா, பல்கலைக்கழக மானியக்குழு, நெல்லை பல்கலை துணைவேந்தர் ஆகியோருக்கு புகார் அனுப்பியிருந்தனர். இதகுறித்து நெல்லை துணைவேந்தர் சபாபதிமோகன் கூறுகையில், ‘கட்டுரையை காப்பியடித்ததை ஒப்புக்கொண்டு பேராசிரியர் கிருஷ்ணன் அமெரிக்க பேராசிரியர்களுக்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளார். நெல்லை பல்கலை., துணைவேந்தருக்கும் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார். இதுநாள் வரையிலும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் இணையதளமாக இயங்கிவந்ததை அவர் தனது கட்டுப்பாட்டில் வைத்து திருத்தங்கள் மேற்கொண்டதால் அதில் நிறைய குளறுபடிகள் நடந்துள்ளது. எனவே அந்த இணையதளம் இனி நெல்லை பல்கலையின் அதிகாரபூர்வ இணையதளம் இல்லை எனவும் அதனை முடக்கிவைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வேறு நிறுவனத்தின் மூலம் புதிய இணையதளம் ஏற்படுத்தப்படும். நெல்லை பல்கலையில் பல்வேறு துறைகளிலும் பேராசிரியர்களிடையே கோஷ்டி மோதல்கள் உள்ளன. அதனால்தான் இவ்வாறு ஒருவர் மீது மற்றவர்கள் புகார் கூற முடிகிறது’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்