ஆர்.டி.ஐ., மூலம் விவரம் கேட்ட மாணவனை அடித்த ஆசிரியர்
புதுடில்லி: தகவல் உரிமை சட்டத் தின் கீழ் விவரம் கேட்ட மாணவரை அடித்து உதைத்தார் பள்ளி ஆசிரியர். டில்லியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் மோக்சின். இவன் கடந்த ஏப்ரல் 1ம்தேதி, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், மனு ஒன்றைத் தாக்கல் செய்தான். அதில், ‘தான் பெயிலாகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தனது விடைத்தாள்களின் நகல்களைத் தரும்படி பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்’ என, கோரியிருந்தான். இதற்கு பதில் கிடைக்காததால், மத்திய தகவல் ஆணையரிடம் புகார் செய்தான். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்ற போது, தான் விடைத்தாள்களை கேட்டதற்காக ஆசிரியர்கள் தன்னை அடிக்கலாம் என்று அச்சம் தெரிவித்தான். உடன், அவனுக்கு விடைத்தாள்களின் நகல் களை கொடுக்க உத்தரவிட்ட ஆணையம், மாணவரை எந்த வகையிலும் தொந்தரவு செய்யக் கூடாது என, பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. அதை மீறி ஏதாவது செய்தால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தது. மேலும், மற்ற மாணவர்களின் விடைத்தாள்களை பார்க்கவும் மோக்சினுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில், பள்ளி நிர்வாகம் கடும் எரிச்சல் அடைந்தது. மோக்சினுக்கு எந்த விவரத்தையும் தர மறுத்ததோடு, அவனை ஜெய்சிங் யாதவ் என்ற ஆசிரியர் கடுமையாக தாக்கினார். பிரம்பால் மோக்சினை அடித்ததோடு, அவனின் தலையைப் பிடித்தும் சுவரில் முட்ட வைத்தார். இந்த தாக்குதலில் மாணவனின் இடது கையில் கொடும் காயம் ஏற்பட்டது. மேலும், ஐந்து அடி பிளாட் பாரத்தில் இருந்து கீழே தள்ளி விடப்பட்டான். அதன்பின், தன் மாமா வை எப்படியோ தொடர்பு கொண்ட மாணவன், நடந்த சம்பவங்களை விவரித்தான். உடன் அவர் பள்ளிக்கு வந்து, போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து, மோக்சினையும், அவரின் மாமாவையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மோக்சினுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தப் பிரச்னை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.