உள்ளூர் செய்திகள்

ஓய்வு பெற்ற ஆசிரியர்களை அதிக சம்பளத்தில் நியமிக்க முடிவு

கடலூர்: அரசு கலைக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை  வெளியேற்றிவிட்டு அதிக சம்பளத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர்களை நியமனம் செய்வதால், தமிழகம் முழுவதும் கவுரவ விரிவுரையாளர்களின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது. அரசு கலைக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க அரசு கவுரவ விரிவுரையாளர்களை நியமித்தது.  தகுதியானவர்கள் மாநிலத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் மூன்று பிரிவுகளாக நியமிக்கப்பட்டு பணி செய்து வந்தனர். அரசு கவுரவ விரிவுரையாளர், சுயநிதிப் பிரிவில் கவுரவ விரிவுரையாளர், பெற்றோர்  ஆசிரியர் கழகத்தின் மூலம் ரூ. ஆயிரத்து 500 முதல் ரூ.மூன்றாயிரம் வரை சம்பளம் பெற்றுக்கொண்டு பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் என பணியாற்றி வருகின்றனர். அரசு மற்றும் சுயநிதி பிரிவு கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளமாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.100 வீதம் அதிபட்சமாக மாதம் ரூ.நான்காயிரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது கவுரவ விரிவுரையாளர்களை  கழற்றிவிட்டு, ஓய்வு பெற்ற பேராசிரியர்களை மீண்டும் பணியில் தொடர அரசு உத்தரவிட்டுள்ளது. ரூ.நான்காயிரம் சம்பளம் வழங்கவே நிதித் துறை அனுமதி மறுப்பதாகக் கூறி, மூன்று மாதத்திற்கு ஒரு முறை வழங்கி வந்தனர். தற்போது, ஓய்வு பெற்ற பேராசிரியர்களுக்கு அவர்கள் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் ஓய்வூதியம் போக மீதமுள்ள தொகையை சம்பளமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஓய்வு பெற்றவர்கள் அதிபட்சமாக ரூ.20 ஆயிரத்திற்கு மேலாக சம்பளம் பெறுவார்கள். தற்போது பல கல்லூரிகளில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் பணியில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். வேலையில்லாத தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டிய அரசு, அவர்களை புறக்கணித்து வருவது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களின் சிறந்த பணியால் 5 சதவீதத்திலிருந்து 25 சதவீதம் வரை  தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க காரணமாக இருந்தவர்களை, கருவேப்பிலை போல் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் போக்கு, வருந்தத் தக்கதாகும். மேலும் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் தற்போது அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் வரை ஓய்வூதியம் பெறுபவர்களாக இருப்பார்கள். ஆனால், படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருந்து, தகுதியின் அடைப்படையில் குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை வெளியேற்றுவது, இளைஞர்களை மீண்டும் நடுத் தெருவில் நிறுத்தும் செயலேயாகும். எனவே, பல ஆண்டுகளாக பணியாற்றிய இவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்