உள்ளூர் செய்திகள்

ஜாதிவாரி சர்வே பணிகள்; கர்நாடகா பள்ளிகளுக்கு அக்., 18 வரை விடுமுறை

பெங்களூரு: கர்நாடகாவில், ஜாதிவாரி சர்வே பணிகள் முடிவடையாததால், வரும் 18ம் தேதி வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.கர்நாடக காங்., அரசின் முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி:கடந்த மாதம், 22ம் தேதி ஜாதிவாரி சர்வேயை மாநில அரசு துவங்கியது. இம்மாதம், 7ம் தேதி பணிகளை முடிக்க திட்டமிட்டிருந்தோம். சர்வேயில், 1.60 லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டனர்; இதில், 1.20 லட்சம் பேர் ஆசிரியர்கள். தொலைத் தொடர்பு பிரச்னை போன்றவற்றால் குறிப்பிட்ட காலத்திற்குள் சர்வேயை முடிக்க இயலவில்லை.இது குறித்து கல்வி துறை, பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். சர்வேயை முடிக்க ஆசிரியர் சங்கத்தினர் கூடுதலாக, 10 நாட்கள் அவகாசம் கேட்டிருந்தனர்.இதை ஏற்று, மாநிலத்தில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளிகளுக்கு வரும் 18ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. பி.யு.சி., இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடக்க உள்ளதால், பி.யு.சி., கல்லுாரி ஆசிரியர்களுக்கு சர்வேயில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.சர்வேயில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பணிநாட்களின் போது, எட்டு விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும். சர்வேயின் போது உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்துக்கு தலா, 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். இனி யாரேனும் இறந்தாலும், 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். சர்வேயில் பங்கேற்பவர்களுக்கு ஊதியமாக தலா, 20,000 ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்