உள்ளூர் செய்திகள்

ஸ்பிக் மெக்கே சர்வதேச மாநாடு: சென்னை ஐ.ஐ.டி.,யில் 20ல் துவக்கம்

சென்னை: ஸ்பிக் மெக்கேவின் ஒன்பதாவது சர்வதேச மாநாடு, வரும் 20ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை, சென்னை ஐ.ஐ.டி.,யில் நடக்கிறது.இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., உயர்கல்வி நிறுவன இயக்குனர் காமகோடி கூறியதாவது:இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாசாரத்தை ஊக்குவிக்கும் தன்னார்வ இயக்கமாக ஸ்பிக் மெக்கே உள்ளது. சென்னை ஐ.ஐ.டி.,யில், 1996 மற்றும் 2014ம் ஆண்டுகளில் அதன் மாநாடு நடந்துள்ளது. ஒன்பதாவது மாநாட்டில், 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள் பங்கு பெறுகின்றனர்.இந்த நிகழ்ச்சிக்காக பதிவு செய்துள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இவர்களுக்கான தங்குமிடம், உணவு உள்ளிட்டவை வழங்கப்படும். இதில் 250க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.வரும் 20ம் தேதி துவங்கும் மாநாட்டில், இசைஅமைப்பாளர் இளையராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். ஹிந்துஸ்தானி இசை, கர்நாடக இசை உள்ளிட்ட இசைக் கலைஞர்கள், பரதநாட்டியம், ஒடிசி நடனம் உள்ளிட்ட நடனக் கலைஞர்களும் பங்கேற்கின்றனர்.கலை, இசை தொடர்பு உடைய 26 பயிலரங்கம் நடக்கிறது. காந்தி வாழ்க்கை பற்றிய திரைப்படத்தை திரையிட்டு, அதுபற்றி பல கோணங்களில் விவரிக்க, டில்லியில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தினர் வருகை தர உள்ளனர். நிச்சயம் இது சிறந்ததாக அமையும்.மேற்கு வங்கம், பஞ்சாப் என, பல மாநில இசையின் வடிவங்களை, இந்த மாநாட்டில் ஒரு சேர கண்டுகளிக்க முடியும். 25ம் தேதி இரவு 8:30 மணியில் இருந்து மறுநாள் காலை 6:00 மணி வரை, தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன; சர்வதேச இசைக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்