எம்.பி.ஏ., மாணவர்கள் வெளிநாட்டு மொழி கற்க வாய்ப்பு
கோவை: பாரதியார் பல்கலை வளாகத்தில், ‘வெளிநாட்டு மொழிகளுக்கான பொது வசதி மையம்’, அக்டோபர் இறுதியில் துவக்கப்படவுள்ளது. பல்கலை துணைவேந்தர் திருவாசகம் கூறியதாவது: இந்தியாவில் மட்டும் சிறந்த நிறுவனங்களுக்கு 2,000 தலைமை நிர்வாகிகள், 8,000 சீனியர் மானேஜர்கள் உட்பட 1.28 லட்சம் பேர் தேவை. உலகளவில் எம்.பி.ஏ., முடித்தவர்களின் தேவை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதைக்கருத்தில் கொண்டு, கோவை பாரதியார் பல்கலையில் எம்.பி.ஏ., மாணவர்களுக்காக, வெளிநாட்டு மொழிகளுக்கான பொது வசதி மையம், அக்., இறுதியில் துவக்கப்படவுள்ளது. இந்த மையத்தில் வெளிநாட்டு மொழிகள் கற்றுத்தரப்படும். இதன் மூலம் எம்.பி.ஏ., முடிக்கும் மாணவர்கள், வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு பெற முடியும். இந்த மையத்தில் பாரதியார் பல்கலை மற்றும் பல்கலையின் இணைப்பு கல்லூரிகளைச் சேர்ந்த எம்.பி.ஏ., மாணவர்கள் படிக்கலாம். ஒரு கல்லூரி மாணவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் மட்டும் அனுமதி அளிக்கப்படும். இந்த மாணவர்களிடம் இருந்து குறைந்த அளவிலான கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு துணைவேந்தர் திருவாசகம் கூறினார்.