புகார் செய்ததால் மாணவிகளை திருப்பி அனுப்பிய பள்ளி
ஸ்ரீவில்லிபுத்தூர்: கோடைவிடுமுறைக்கு பின் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே பாடப்புத்தகம் அச்சிடுவதற்காக ஜூன் 15ம் தேதி பள்ளிகள் திறப்பை தள்ளி வைத்து அரசு அறிவித்தது. இதையடுத்து 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்ச்சி சதவிகித்தை அதிகரிக்க வேண்டி சிறப்பு வகுப்புகள் நடத்திய, மெட்ரிக், அரசு உதவிபெறும் பள்ளிகள், வகுப்புகளை நடத்தாமல் இருந்து வந்தன. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடந்தன. இதற்காக ஜூன் 7 ம் தேதி காலை பிளஸ்2 மாணவிகள் வகுப்புகளுக்கு வந்தனர். அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி நிர்வாகத்திடம் வகுப்பை நிறுத்த கூறியதை அடுத்து மாணவிகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.