உள்ளூர் செய்திகள்

சமச்சீர் கல்வி வழக்கில் இன்று மாலை தீர்ப்பு

கடந்த தி.மு.க. ஆட்சியில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஒரே மாதிரியான கல்வித் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கூறி, சமச்சீர் பாடத்திட்டத்தை ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு அறிமுகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த கல்வியாண்டில் 1 முதல் 10ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் சமச்சீர் கல்வி முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டு அதற்கான புத்தகங்களும் அச்சிடப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.இ.அ.தி.மு.க. பதவியேற்றது. முதலமைச்சர் ஜெயலிதா, சமச்சீர் கல்வி திட்டம் தரமானதாக இல்லை என்று கூறி பழைய பாடத்திட்டத்தையே தொடர்வது என்று முடிவெடுத்து அறிவித்தார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை, தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தினர். இந்த வழக்கின் விசாரணை இன்று காலையுடன் முடிவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு இன்று மாலை 4 மணியளவில் அறிவிக்கப்படும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். சமச்சீ்ர் பாடத்திட்டம் தரமானதாக இல்லாத நிலையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், புத்தகங்கள் பிரிண்ட்டாக அதிக செலவாகும் என்று கூறப்படுகிறது. செலவை விட, குழந்தைகளின் எதிர்காலம்தான் மிகவும் முக்கியம். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் போது புதிய புத்தகங்கள் தயாராக இருக்கும் என்று அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்