உள்ளூர் செய்திகள்

டாலரில் பணம் கொடுத்தால் இன்ஜினியரிங் சீட் கிடைக்குமா?

இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவியரும், பெற்றோரும் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது சந்தேகளுக்கு விளக்கம் பெற்றனர். மாணவர்கள், பெற்றோரது கேள்விகளும், நிபுணரின் பதில்களும்: மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எனது கட்-ஆப் 94. டெக்ஸ்டைல் டெக்னாலஜி போன்ற படிப்புகளை எடுத்து படித்தால் சாப்ட்வேர் துறைகளில் வேலை வாய்ப்பு கிடைக்குமா?- கோபிநாத், திருநெல்வேலிகம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பொறியியல் பாடப்பிரிவு மாணவர்கள் அதிகளவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள். இதேபோலவே, வேறுபல பொறியியல் படிப்புகளை படித்த மாணவர்களுக்கும் ஐ.டி., துறை வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. டெக்ஸ்டைல் டெக்னாலஜி படிப்பவர்களுக்கு அத்துறையிலேயே வேலை வாய்ப்பு கிடைக்கும். சாப்ட்வேர் நிறுவனங்களில் சேருவதற்கு போதிய திறன் தேவை. தற்போது பி.எஸ்சி., படித்த திறமையான மாணவர்களைக்கூட சாப்ட்வேர் நிறுவனங்கள் வேலைக்கு எடுத்துக்கொள்கின்றன. எந்தப்பாடப்பிரிவை எடுத்து படித்தாலும் திறமையான மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயம். 111.75 கட்-ஆப் பெற்றுள்ள எனக்கு எப்போது கவுன்சிலிங்?- அருள், மதுரைமூன்றாம் கட்ட கவுன்சிலிங் 16ம் தேதி முதல் துவங்க உள்ள நிலையில், தகுதி பெற்று விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. உங்களது கட்-ஆப் மதிப்பெண்ணிற்கு வரும் 23ம் தேதி கவுன்சிலிங் நடைபெற உள்ளது. அழைப்பு கடிதம் கிடைக்காவிட்டாலும் கவுன்சிலிங்கிற்கு இரண்டு மணிநேரம் முன்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துள்ள விசாரணை அலுவலகத்தை அணுகி நகல் கவுன்சிலிங் கடிதத்தை பெற்றுக்கொண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த எனது கட்-ஆப் 104.75; எனக்கு இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் இடம் கிடைக்குமா?-விக்னேஷ், திருநெல்வேலிஅரசு ஒதுக்கீட்டின்கீழ் கவுன்சிலிங் மூலம் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச மதிப்பெண்களை கணிதம், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் நிங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் சேர தகுதி பெற முடியும். இதுவே மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தால் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினராக இருந்தால் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். உங்களுக்கு மூன்றாம் கட்ட கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள அழைப்பு வரும். இந்த கவுன்சிலிங் ஆகஸ்ட் 16ம் தேதியில் இருந்து 26ம் தேதிவரை நடைபெறுகிறது. கவுன்சிலிங்கின் போது உள்ள காலியிடங்களில் உங்களுக்கு விருப்பமான் கல்லூரியையும், பாடப்பிரிவையும் தேர்வு செய்து கொள்ளலாம். இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு காலம் தவறி சென்றால் என்ன செய்வது?- சுரேஷ் குமார், கோவைசரியான நேரத்திற்கு கவுன்சிலிங்கில் கலந்துகொள்வதற்கு ஏற்ப பயணத்தை முன்னதாக வைத்துக்கொள்ளுங்கள். கவுன்சிலிங்கிற்கு தாமதமாக சென்றால் இழப்பு உங்களுக்குத்தான். நீங்கள் கவுன்சிலிங்கிற்கு செல்லும் நேரத்தில் இருக்கும் காலியிடங்களில் இருந்துதான் கல்லூரியை தேர்வு செய்யமுடியும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நான் பிளஸ் 2 உடனடி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். நான் பொறியியல் கல்லூரியில் சேரமுடியுமா?-தனபாலன், பரமக்குடிபொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான மூன்றாவது கட்ட கவுன்சிலிங் ஆகஸ்ட் 26ம் தேதி நடைபெறுகிறது. அதையடுத்து, உடனடி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் கவுன்சிலிங் நடைபெறும். இதற்கான விண்ணப்பங்கள் 14ம் தேதி 21ம் தேதி வரை வழங்கப்படுகின்றன. சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவர் சேர்க்கை மையத்தில், 500 ரூபாய் செலுத்தி (எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் 250 ரூபாய்) விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 21ம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை அண்ணா பல்கலைக் கழக இணையதளத்தில், தெரிந்துகொள்ளலாம். இந்த மாணவர்களுக்கான கவுன்சிலிங் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும். ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்லூரி எது என்பதை எப்படி தெரிந்துகொள்வது?- அஜய்குமார், அருப்புக்கோட்டைஏ.ஐ.சி.டி.இ., என்ற அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குகிறது. அண்ணா பல்கலைக்கழகம் இணைப்பு அனுமதியை வழங்குகிறது. ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் பட்டியலையும் அதன் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்று பல்கலைக்கழக இணைப்பு அனுமதிபெற்ற பொறியியல் கல்லூரிகள் மட்டுமே ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கையில் இடம்பெறுகின்றன. எனது மகனுக்கு உரிய தகுதி மதிப்பெண் இல்லை. டாலரில் பணம் கொடுத்து அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கான இடஒதுக்கீட்டின்கீழ் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இடம் பெறலாம் என்கிறார்களே?-காமராஜ், பண்ருட்டிஅரசு ஒதுக்கீட்டின்கீழ் இடம்பெறுவதற்கு சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உரிய தகுதி மதிப்பெண்கள் அவசியம். அந்த தகுதி மதிப்பெண்கள் இருப்பவர்கள் மட்டுமே கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவார்கள். வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கான இடஒதுக்கீடு கல்லூரிகளில் இருக்கிறது. அதற்காக டாலரில் பணம் கொடுக்கும் யார் வேண்டுமானாலும் அந்த ஒதுக்கீட்டின்கீழ் இடம் பெற்றுவிட முடியாது. இதற்கான உரிய தகுதி விவரங்களை அண்ணா பல்கலைக்கழகத்தில் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு கட்டணங்களை விட வெளிநாட்டு வாழ் இந்திய மாணவர்களுக்கான கட்டணம் அதிகமாக இருக்கும். மிகவும் பிற்படுத்தப்பட்ட எனது கட்-ஆப் 115. எனக்கு ஏரோநாட்டிக்கல் பாடப்பிரிவில் இடம் கிடைக்குமா?-பச்சையப்பன், திருவண்ணாமலைமூன்றாம் கட்ட கவுன்சிலிங்கில் தான் நீங்கள் கலந்து கொள்ள வேண்டியதிருக்கும். உங்களது கவுன்சிலிங்கிற்கு முந்தைய நாளில் உள்ள காலியிட நிலவரங்களை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப தான் முடிவு எடுக்க வேண்டும். உங்களுக்கு ஏரோநாட்டிக்கல் பாடப்பிரிவில் இடம் கிடைக்குமா என்பதை இப்போதைய காலியிட நிலவரங்களை கொண்டு கூறமுடியாது. ஆனால் ஏதாவது ஒரு கல்லூரியில் ஒரு பாடப்பிரிவில் நிச்சயம் இடம் கிடைக்கும். பிளஸ் 2 உடனடித்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று 150.25 கட்-ஆப் மதிப்பெண் பெற்றுள்ளேன். தற்போது நடைபெற்று வரும் கவுன்சிலிங்கில் எனது கட்-ஆப் மதிப்பெண்களின்படி கல்லூரியை பெற முடியுமா?-ஆறுமுகம், நாமக்கல்முடியாது. நீங்கள் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்காமலேயே எப்படி கல்லூரியையும், பாடப்பிரிவையும் தேர்வு செய்ய முடியும். ஏற்கெனவே, விண்ணப்பித்த மாணவர்களுக்கு இரண்டு கட்ட கவுன்சிலிங் முடிவடைந்து மூன்றாவது கட்ட கவுன்சிலிங் துவங்கியுள்ளது. இந்த மூன்றாம் கட்ட கவுன்சிலிங் முடிவடைந்த பிறகு உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக துணை கவுன்சிலிங் நடைபெறும். அதில் பங்குபெறுவதற்கு அண்ணா பல்கலைக்கழக அறிவிப்புப்படி உரிய காலத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்