உள்ளூர் செய்திகள்

பள்ளிகளுக்கு புத்தகங்கள் வினியோகிக்க பாடநூல் கழகத்திற்கு தடையா?

சமச்சீர் கல்வி புத்தகங்களில் ஆட்சேபகரமான பகுதிகளை நீக்கிவிட்டு, எடுத்து செல்ல கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், புத்தக வினியோகத்திற்கு பாடநூல் கழகத்திற்கு வாய்மொழி உத்தரவில் தடைவிதித்துள்ளது. சமச்சீர் கல்வி புத்தகங்கள் பெரும்பாலான அரசு, உதவிபெறும் பள்ளிகளுக்கு கடந்த மாதமே அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. பின்பு அவை திரும்பவும், புத்தக மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. தற்போது அவற்றை வந்து பெற்றுக் கொள்ளுமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் ஆட்சேபகரமான பகுதிகளை கிழித்தோ, ஸ்டிக்கர் ஒட்டியோ எடுத்துச் செல்லும்படி, நேற்று புதிய உத்தரவிட்டுள்ளனர். இப்பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால், ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் கூடுதல் ஆசிரியர்களை அழைத்துள்ளனர். மேலும், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளுக்கு நேற்று மற்றுமொரு புதிய கால அட்டவணை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்ப் பாடம் என்றால் பொதுவான திருக்குறளையோ, வேறு இலக்கியங்களையோ கற்பிக்க வேண்டும். கணிதம் எனில், பொதுவான வரைபடம் கற்பிக்கலாம் என, ஒவ்வொரு பாடத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி அல்லது பழைய பாடத்திட்டம் என எந்த முடிவு வந்தாலும் பாதிக்காதவாறு பாடங்களை திட்டமிட்டு அட்டவணைப் படுத்திக் கொடுத்துள்ளனர். புத்தகம் ரத்து: இதற்கிடையில், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் சமச்சீர் கல்வி புத்தகங்களை மெட்ரிக் பள்ளிகளுக்கு விலைக்கு வழங்கினர். தற்போது, அவற்றை நிறுத்தும்படி வாய்மொழி உத்தரவாக தெரிவித்துள்ளனர். அதேசமயம், பழைய பாடத்திட்டத்திலான புத்தகங்கள் அச்சிடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. சிவகாசியில் மட்டும் 25க்கும் மேற்பட்ட அச்சகங்களில், இந்தப் பணி போர்க்கால நடவடிக்கையாக நடந்து வருகிறது. இதேபோல, பக்கத்து மாநிலங்களிலும் இப்பணி நடப்பதாக கூறப்படுகிறது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்