உள்ளூர் செய்திகள்

முதுகலை ஆசிரியர் பட்டியல் வடமாவட்டத்தில் அதிக இடம்

சென்னை: முதுகலை ஆசிரியர் பணி நியமன கவுன்சிலிங், சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 22ம் தேதி நடந்தது. கவுன்சிலிங் துவங்குவதற்கு முன், மாவட்ட வாரியாக காலிப் பணியிட பட்டியல்கள் வெளியிடப்பட்டன. அதில், வட மாவட்டங்களில் பெரும்பாலான பாடங்களில் காலியிடங்கள் இருப்பது தெரியவந்தது. கணிதப் பாடத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 பணியிடங்கள், கடலூர் மாவட்டத்தில் 11 பணியிடங்கள், தர்மபுரி மாவட்டத்தில் 10 பணியிடங்கள் காலியாக இருந்தன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 பணியிடங்களும், திருவாரூர் மாவட்டத்தில் 20 பணியிடங்களும், நாகை மாவட்டத்தில் 18 பணியிடங்களும் காலியாக இருந்தன. வேதியியல் பாடத்தில் வேலூர் மாவட்டத்தில் 23 பணியிடங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 26 பணியிடங்கள், தர்மபுரி மாவட்டத்தில் எட்டு பணியிடங்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒன்பது பணியிடங்கள், திருவாரூர் மாவட்டத்தில் 16 பணியிடங்கள், நாகை மாவட்டத்தில் 11 பணியிடங்கள், விழுப்புரம் மாவட்டத்தில் 21 பணியிடங்கள் காலியாக இருந்தன. சென்னை மாவட்டத்தில் காலிப் பணியிடங்கள் எதுவும் இல்லை. பக்கத்தில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குறைவான எண்ணிக்கையில் காலியிடங்கள் இருந்தன. புதிய ஆசிரியர்கள் அனைவருக்கும் வரும் 25ம் தேதியில் இருந்து மூன்று நாட்களுக்கு சென்னையில் பல்வேறு இடங்களில் பாட வாரியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இது குறித்த விவரங்கள் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. வயதானவர்களே அதிகம்: வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வாகி, நேற்று கவுன்சிலிங்கிற்கு வந்த ஆசிரியர்களில் பெரும்பாலானோர் 45 வயதிற்கு மேற்பட்டவர்களாகவே இருந்தனர். பல பேர் 50 வயதை கடந்தவர்களாகவும் இருந்தனர். பெரும்பாலான ஆசிரியர்கள், அடுத்த பத்தாண்டுகளுக்குள் ஓய்வு பெற்றுவிடுவர் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டதாரி ஆசிரியர் கவுன்சிலிங்: முதுகலை ஆசிரியர் கவுன்சிலிங் நடந்த அதே நேரத்தில், எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கவுன்சிலிங்கும் நடந்தது. 600க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர். குறைவான ஆசிரியர்கள் என்பதால் அந்த பள்ளியில் எந்தவிதமான பிரச்னையும் ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்