மாணவர்களே ஒரு நாள் முன்பே சென்னையில் இருங்க
அண்ணா பல்கலை கவுன்சிலிங்கில் பங்கேற்கவுள்ள வெளியூர் மாணவ, மாணவியர் ஒரு நாள் முன்னதாகவே சென்னையில் இருப்பது அவசியம். அண்ணா பல்கலை கவுன்சிலிங் காலை 7.30 முதல் மாலை 6.00 மணி வரை நடக்கிறது. மாணவ, மாணவியர் ஒன்றரை மணி நேரம் முன்னதாகவே கவுன்சிலிங் அரங்குக்கு வந்துவிட வேண்டும். கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான அழைப்பு கடிதத்துடன், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்று (டி.சி.,) ஜாதிச் சான்று உள்ளிட்ட கவுன்சிலிங்குக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் வர வேண்டும். வெளியூர் மாணவர்கள், கவுன்சிலிங் தேதிக்கு ஒரு நாள் முன்பே சென்னையில் இருப்பது அவசியம். கவுன்சிலிங் துவங்கும் முன் மாணவ, மாணவியர் தங்களது பெற்றோருடன் பல கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று அவற்றின் உள்கட்டமைப்பு, கல்வித்தரம் உள்ளிட்டவற்றை நேரடியாக பார்வையிடுவதும் நல்லது. கவுன்சிலிங் வரும் மாணவ,மாணவியருடன் பெற்றோர் அல்லது உறவினர்களில் யாரேனும் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பள்ளி படிப்பு முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவ, மாணவியர் எதிர்காலத்தில் தங்களின் லட்சியம் நிறைவேறும் வகையில், பிடித்த பாடப்பிரிவில் சேர வேண்டும். பெற்றோர், உறவினர்களின் கட்டாயத்தில் படிப்பை தேர்வு செய்யக்கூடாது. இதனால், எதிர்காலம் பாதிக்கப்படும். உயர்கல்வி பயிலும் பிள்ளைகள் மீது, பெற்றோர் தங்களது ஆசைகளை திணிக்கக் கூடாது. அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் சேர அனுமதிக்க வேண்டும். திட்டமிட்டு படிப்பதை வழக்கமாக கொண்டு மாணவ, மாணவியர் செயல்பட வேண்டும். வாழ்வில் எதிர்பார்த்தவை அனைத்தும் கிடைக்காது; இதை புரிந்து கொள்வதும் அவசியம்.