அரசு கல்லூரிகளில் புதிய முதல்வர்களை நியமிக்க உத்தரவு
தமிழகம் முழுவதும் உள்ள, 68 அரசு கல்லூரிகளில் பணி மூப்பு அடிப்படையில், புதிய முதல்வர்கள் உடனடியாக நியமிக்கப்பட உள்ளனர். தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 1ம் தேதியின்படி, 68 அரசுக் கல்லூரி முதல்வர் பணியிடங்களில் காலி நிலை ஏற்பட்டன. அரசுக் கல்லூரிகளில் இவ்வாறு மிக அதிகமான காலிப் பணியிடங்கள் ஏற்பட்டதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா, இந்தப் பிரச்னையை தீர்க்க, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், உயர்கல்வித்துறை அமைச்சர், தலைமைச் செயலர் மற்றும் உயர்கல்வித்துறை அரசு முதன்மைச்செயலர் ஆகியோருடன், கடந்த 17ம் தேதி முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், காலியாக உள்ள முதல்வர் பதவிகளை நிரப்பிட, அதற்குக் கீழ்நிலைப் பதவியான தேர்வு நிலை விரிவுரையாளர், இணைப் பேராசிரியர் பதவியில் பணிமூப்பை உடனடியாக நிர்ணயிக்கவும், அதன் அடிப்படையில் அரசுக் கல்லூரி முதல்வர் பணியிடங்களை நிரப்பவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையொட்டி, இரண்டாம் நிலை முதல்வர் பதவிகளை நிரப்ப, அதற்குக் கீழ்நிலைப்பதவியான தேர்வு நிலை விரிவுரையாளர், இணைப் பேராசிரியர் பதவியில் பணி மூப்பு, கடந்த 17ம் தேதி நிர்ணயிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அரசுத்துறைச் செயலர்கள் விவாதித்து, பணிமூப்பு பட்டியல் தயாரிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்தனர். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா, கடந்த 17ம் தேதி அன்று வழங்கிய அறிவுரைக்கிணங்க, தேர்வு நிலை விரிவுரையாளர், இணைப் பேராசிரியர்களின் பணிமூப்புப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இணையதளத்திலும் கடந்த 17ம் தேதி அன்றே வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில், 68 அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட உள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.