தரம் உயர்த்தப்பட வேண்டிய அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்
கம்ப்யூட்டர், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் அனைத்து துறைகளும் மாற்றம் கண்டுள்ளபோது, கல்வித்துறையும் அதற்கேற்ப வளர்ச்சி காணவேண்டியது அவசியம். ஆனால் தொழில்நுட்ப கல்வியை வழங்கும் அரசு பாலிடெக்னிக்குகளோ மேம்பாடு பெறாத காரணத்தால், தரமான கல்வி வழங்க முடியவில்லை. தமிழகத்தில் 30 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. 22 கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை. 80 துறைத் தலைவர்களில் 72 இடங்கள் காலி. 1000 ஆசிரியர்களில் 340 பேர்தான் உள்ளனர் என்றால் இதன் நிலையை புரிந்து கொள்ளலாம். 1960களில் துவக்கப்பட்ட நிலையிலேயே இன்றும் அவை உள்ளன. ஆனால் மாணவர் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. துவக்க நிலையில் 10 ஆயிரம் என்றளவில் இருந்த மாணவர் எண்ணிக்கை, இன்று 40 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது. ஆனால் அதற்கேற்ப பாலிடெக்னிக்குகளில் ஒர்க்ஷாப், ஆய்வுக் கூட வசதி கொஞ்சமும் அதிகரிக்கவில்லை. ஷிப்ட் நெருக்கடி: ஆனால் மாணவர் அதிகரித்ததால் பாடம் கற்பிக்கும் முறையில் மட்டும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். ரெகுலர் மாணவர்கள் (420 பேர்) காலை 8.30 முதல் மதியம் 3.30 மணி வரையும், &'ஷிப்டு&' முறையிலான மாணவர்கள் (240 பேர்) மதியம் 12.30 முதல் இரவு 7.30 மணி வரையும் படிக்கின்றனர். அப்படியும் சமாளிக்க வழியில்லாமல் பகுதி நேர படிப்பாக மாலை 6.15 முதல் இரவு 9.15 மணி வரையும் வகுப்புகள் நடக்கின்றன. இதில் 120 பேர் படிக்கின்றனர். இம்மூன்று நேரங்களிலும் ரெகுலர் ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். இதனால் விரைவில் களைப்படைந்து விடுகின்றனர். ஆசிரியர்களுக்கு ஆர்வம் ஏற்பட கூடுதலாக தினமும் ரூ. 50 என்ற அளவில்தான் சம்பளம் தருகின்றனர். இப்பிரச்னையை சமாளிக்க தற்காலிக ஆசிரியர்களை நியமித்துள்ளனர். அவர்களுக்கும் சம்பளம் குறைவே. மேலும் ரெகுலர் மாணவர்களும், ஷிப்டு முறை மாணவர்களும் மதியம் 12.30 முதல் மதியம் 3.30 வரை கல்லூரி வளாகத்தில் ஒரே நேரத்தில் இருப்பர். அதேபோல ஷிப்டு முறை மாணவர்களும், பகுதி நேர படிப்பு மாணவர்களும், மாலை 6.15 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஒரே நேரத்தில் வளாகத்தில் இருப்பர். இதனால் ஒர்க்ஷாப், வகுப்பறை பிரச்னை நிலவுகிறது. நெருக்கடியான நிலையில் கூட்டத்தை சமாளிக்கவும் ஆசிரியர்கள் திணறிவிடுகின்றனர். மேம்படுத்துவதே தீர்வு: இருதரப்பு மாணவர்களும் ஒருமித்த நேரத்தில் ஒர்க்ஷாப்பில் ஒழுங்காக கற்க முடிவதில்லை. பாடங்களையும் கற்பிக்க முடிவதில்லை. எனவே அரசு பாலிடெக்னிக்கை தரம் உயர்த்தினால் ஒழிய இதற்கு வேறு தீர்வு இல்லை. இதற்கு முதலில் கூடுதல் பாலிடெக்னிக் கல்லூரிகள் திறக்க வேண்டும். புதிய வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள், ஒர்க்ஷாப்பிற்கு புதிய, நவீன கருவிகள் தேவை. முக்கியமாக கூடுதல் ஆசிரியர், அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். இதையெல்லாம் செய்தால்தான் பாலிடெக்னிக் கல்லூரிகளால் தரமான தொழில்நுட்ப கல்வியை வழங்க முடியும். அரசுகள் இலவச திட்டங்களில் காட்டும் அக்கறையை இதிலும் காட்டினால்தான் கல்வியாலும், தொழிலாலும் முன்னேற்றம் காணமுடியும்.