‘கேம்பஸ் இன்டர்வியூ’ மூலம் போலி நியமன உத்தரவா?
தமிழகத்தில் தற்போது 320க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த ஆண்டு மட்டும் புதிதாக 74 தனியார் பொறியியல் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. பொறியியல் படிப்பை முடித்தவுடன், கைநிறைய சம்பளத்தில் சம்பளம் கிடைப்பதால், மாணவர்களின் ஆர்வம் இன்ஜினியரிங் படிப்பு மீது அதிகமாகவே உள்ளது. மாணவர்கள் தனியார் பொறியியல் கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பதில், ‘அக்கல்லூரியில் படித்த எத்தனை மாணவர்களுக்கு ‘கேம்பஸ் இன்டர்வியூ’ மூலமாக வேலை கிடைத்துள்ளது’ என்பது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இதற்காக, தனியார் பொறியியல் கல்லூரிகளும், தங்களது கல்லூரியில் நடக்கும் ‘கேம்பஸ் இன்டர்வியூ’வில் அதிக மாணவர்களுக்கு வேலை கிடைத்திருப்பதாக விளம்பரப்படுத்தி வருகின்றன. மேலும், தனியார் பொறியியல் கல்லூரிகள் போட்டி போட்டு, பல தனியார் நிறுவனங்களை தங்களது கல்லூரியில் நடைபெறும் ‘கேம்பஸ் இன்டர்வியூ’க்களுக்கு அழைத்து வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் நேரடியாக நடத்தப்படும் ‘கேம்பஸ் இன்டர்வியூ’வில் முன்னணி நிறுவனங்கள் மட்டுமே அழைக்கப்படுவதுடன், ‘கேம்பஸ் இன்டர்வியூ’ முறைப்படியும் நடத்தப்படுகிறது. ஆனால், சில தனியார் பொறியியல் கல்லூரிகள் போலி நிறுவனங்களை ‘கேம்பஸ் இன்டர்வியூ’விற்கு அழைத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பை முடிப்பதற்கு ஓர் ஆண்டு முன்பாகவே ‘கேம்பஸ் இன்டர்வியூ’க்கள் நடத்தப்படுகின்றன. ‘கேம்பஸ் இன்டர்வியூ’விற்கு பிறகு மாணவர்களுக்கு வேலைக்கான அழைப்புக் கடிதம் (ஆபர் லெட்டர்) மட்டுமே வழங்கப்படுகிறது. இக்கடிதத்தில், ‘படிப்பில் குறிப்பிட்ட மதிப்பெண் சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மருத்துவ தகுதி பெற்றிருக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட சில நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கும். மாணவர்கள் படிப்பை முடித்து, வேலைக்கான அழைப்புக் கடிதம் வழங்கிய நிறுவனத்திற்கு செல்லும்போது, ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி பணி மறுக்கப்படுவதாகவும், தாமதப்படுத்தப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. சில தனியார் பொறியியல் கல்லூரிகள், சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, மாணவர்களுக்கு போலியாக வேலைக்கான அழைப்பு கடிதங்களை வழங்கி வருவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இதுகுறித்து, சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு தனியார் பொறியியல் கல்லூரிகளில், எந்தெந்த நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டன? அம்முகாம்களில் எத்தனை மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்? சம்பளம் எவ்வளவு? எந்தெந்த துறைகளில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்? உள்ளிட்ட விவரங்களை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்புமாறு தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படவுள்ளது. போலி நிறுவனங்களைக் கொண்டு ‘கேம்பஸ் இன்டர்வியூ’ நடத்தப்படுவதாகவோ, தனியார் பொறியியல் கல்லூரிகள் சில தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கொண்டு வேலைக்கான போலி அழைப்புக் கடிதங்களை வழங்குவதாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இதுவரை எந்த புகாரும் வரவில்லை. அவ்வாறு புகார் வந்தால், அவற்றின் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஏதாவது ஒரு தனியார் பொறியியல் கல்லூரி இத்தகைய செயலில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால், அக்கல்லூரி மீது அண்ணா பல்கலைக் கழகம் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார். இவற்றை கண்காணிக்க எவ்வித அமைப்பு இல்லாததால், சில தனியார் பொறியியல் கல்லூரிகளும், தனியார் பல்கலைக்கழகங்களும் இம்முறைகேட்டை தொடர்ந்து செய்து வருகின்றன. மாணவர்களும் இந்த மோசடி குறித்து எங்கு புகார் தெரிவிப்பது என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். ‘கேம்பஸ் இன்டர்வியூ’வில் எந்தெந்த தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன, அவற்றில் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது, ‘கேம்பஸ் இன்டர்வியூ’வில் வேலைக்கான அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டவர்களில் எவ்வளவு பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்பனவற்றை அரசு கண்காணிக்க வேண்டும். தனியார் பொறியியல் கல்லூரிகள் செய்துவரும் முறைகேட்டை தடுக்க முடியும்.