உள்ளூர் செய்திகள்

அழைப்புக் கடிதம் அனுப்பாத மாணவருக்கு மருத்துவ இடம்

மருத்துவக் கலந்தாய்விற்கு விண்ணப்பித்திருந்த தருமபுரி மாணவர் சதீஷ்குமாருக்கு, கலந்தாய்விற்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்படாததால் அவரால் கலந்தாய்வில் பங்கேற்க முடியவில்லை. அவர் 200க்கு 196.50 கட் ஆப் எடுத்திருந்தார். பின்னர்தான் தனக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படவில்லை என்பதை அறிந்து தேர்வுக் குழுவிடம் முறையிட்டார். இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு அழைக்குமாறு கோரியும், அழைப்பு வரவில்லை. எனவே, அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்க உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கு பதில் அளித்த தேர்வுக் குழு, அழைப்புக் கடிதம் பெறாத மாணவர்களும், இணையதளத்தின் மூலம் தங்களது கட்-ஆப் மதிப்பெண்ணிற்கு எந்த நாளில் கலந்தாய்வு நடைபெறுகிறதோ அன்றைய தினம் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு இணையதளங்களில் வெளியிட்டுள்ளோம். மாணவர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பார்த்து கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளோம். எனவே, கலந்தாய்வில் பங்கேற்காததற்கு தேர்வுக் குழு பொறுப்பேற்க முடியாது. அதுமட்டுமல்லாமல், அழைப்புக் கடிதம் வராததால் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை என்று இவரைப் போல 31 மாணவர்கள் எங்களை அணுகியுள்ளனர்.அவர்களுக்கும் மருத்துவ இடங்கள் ஒதுக்க வேண்டும் என்றால், எங்களது கலந்தாய்வு நடைமுறைகளே சிக்கலுக்குள்ளாகும் என்று கூறப்பட்டது. இதற்கு பதில் அளித்த மாணவரது வழக்கறிஞர், இவரை விட கட்-ஆப் குறைந்த மாணவருக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. வெறும் அழைப்புக் கடிதம் பெறாததால் மட்டுமே, ஒரு மாணவருக்கான வாய்ப்பை மறுப்பது சரியல்ல. அழைப்புக் கடிதம் அனுப்புவதற்கு தபால் உறைகளை முகவரியுடன் வாங்கும் மருத்துவத் தேர்வுக் குழு இணையதளத்தில் பார்த்து மாணவர்கள் கலந்தாய்விற்கு வர வேண்டும் என்று கூறுவதில் நியாயமில்லை. அதுவும் தருமபுரியில் ஒரு சிறிய கிராமத்தில் வாழும் மாணவருக்கு, இணையதள வசதி கிடைக்கும் என்று கூற முடியாது. எனவே, இணையதளத்தைப் பார்த்து கலந்தாய்விற்கு வந்திருக்க வேண்டும் என்று தேர்வுக் குழு கூறும் வாதத்தை ஏற்க முடியாது என்றார். மாணவர் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி பால் வசந்தகுமார், கலந்தாய்வுக் கடிதம் அனுப்பப்படாததால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு நடப்புக் கல்வியாண்டில் ஏதேனும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடம் ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்