உள்ளூர் செய்திகள்

வி.ஏ.ஓ., பணிக்கு தேர்வாகி, பணியில் சேராதவர்களால் சிக்கல்

தமிழக அரசுப் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் அரசு பணியாளர் தேர்வாணையத்தில், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீது புகார் எழுந்து, லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு, ஆவணங்கள், பணம், நகை பறிமுதல், வழக்கு பதிவு என நடவடிக்கை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. உதவி பல் மருத்துவர், குரூப் 1 மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பியதில் முறைகேடுகள் தொடர்பாகத் தான், இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. ஆனால், வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்பியதிலும் முறைகேடுகள் நடந்திருப்பதும், தற்போது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் தற்போது, போலீஸ் மற்றும் தேர்வாணைய செயலர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த முறை வி.ஏ.ஓ., தேர்வு நடத்தப்பட்டதில், எஸ்.சி.,- எஸ்.டி., பிரிவினர் தேர்வு தொடர்பாக பிரச்னை எழுந்து, கோர்ட் வரை சென்றது. கோர்ட் உத்தரவுப்படி, தேர்வாணையம் 400க்கும் மேற்பட்டோரை தேர்வு செய்தது. வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பித்த இப்பிரிவினரில், முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்ற விதவை உள்ளிட்ட ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களும் உண்டு. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களில், குறிப்பிட்ட சதவீதத்தினர் ஒதுக்கீட்டிற்கான உரிய சான்றிதழ்கள் இணைக்கவில்லை.சான்றிதழ்களை சமர்ப்பித்து பணி நியமன ஆணை பெற்றுக் கொள்ளுமாறு, தேர்வாணையத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டும், ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்றவர்களில் 20 சதவீதம் பேர், சான்றிதழ்களை சமர்ப்பிக்காமல் இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது. இதிலும் முறைகேடுகள் நடந்திருக்கலாமோ என்று, தேர்வாணையம் சந்தேகிக்கிறது. தொடர்ந்து, தேர்வானவர்களிடம் முறையாக விசாரணை நடத்தவும் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. இதனால், காலியாக உள்ள வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்புவதில், தொடர்ந்து பிரச்னை நீடித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்