தானே புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள்
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பிளஸ் 2 மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்த, மனநல நிபுணர்களைக் கொண்டு ஆலோசனை வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் மார்ச் 8ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க உள்ள நிலையில், வரும் பிப்ரவரி 2 முதல் 20ம் தேதி வரை செய்முறைத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடலூர் மாவட்டத்தில் மட்டும், தானே புயல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி செய்முறைத் தேர்வை ஒத்தி வைத்தனர்; வரும் பிப்ரவரி 8 முதல் 24ம் தேதி வரை செய்முறைத் தேர்வு நடைபெறும் என, கல்வித்துறை அறிவித்தது. புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்த, அந்தந்த பள்ளிகளில் மனநல நிபுணர்களைக் கொண்டு ஆலோசனை வழங்கப்படுகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, கூடுதல் நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. செய்முறைத் தேர்வு துவங்கும் 10 நாட்களுக்கு முன், ரெக்கார்ட் நோட்டு கொடுக்க வேண்டும் என்பதை மாற்றி, செய்முறைத் தேர்வு அன்றே கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.