உள்ளூர் செய்திகள்

கல்வி தாகத்துடன் காத்திருக்கும் தெங்குமரஹாடா கிராம சுட்டிகள்!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெங்குமரஹாடா, இயற்கை மாசுபடாத அழகிய கிராம். இங்கு செல்ல, நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களை கடந்து செல்ல வேண்டும். அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த கிராமத்துக்கு செல்ல அடிப்படை வசதியான சாலைக்கு கூட, பல ஆண்டுகாலமாக மக்கள் போராடி வருகின்றனர். இதனால், பல காலமாக  தனித்து விடப்பட்டு தீவு போல் அமைந்திருந்த இக்கிராம மக்கள் தொலைபேசி மூலமாக மட்டுமே வெளியுலகை தொடர்பு கொண்டு வருகின்றனர். பவானிசாகர் அணையைக் கடந்து 24 கி.மீ., தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாகச் சென்று  தான் இக்கிராமத்தை அடைய முடியும். இக்கிராமத்தில் 1,500க்கு மேற்பட்ட குடும்பங்கள்  வசித்து வருகின்றன. இயற்கை எழில் சூழ்ந்த, வனத்துறைக்கு  சொந்தமான இப்பகுதி, நீண்டகால குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் 600 ஏக்கர்  விவசாய நிலமுள்ளது. இந்த நிலங்களில் வாழை, நெல், சோயா பீன்ஸ், செண்டுமல்லி, நிலக்கடலை  பயிர்களை  விவசாயிகள் விளைவித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள மக்கள், தங்கள் குழந்தைகளின் கல்விக்கு இங்குள்ள அரசு பள்ளிகளையே நம்பியுள்ளன. இங்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியும், எட்டாம் வகுப்பு வரையுள்ள  நடுநிலைப்பள்ளியும் உள்ளன. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எட்டாம் வகுப்பு முடிந்த பிறகு, தெங்குமரஹடா கிராமத்தின் அருகிலுள்ள, ஈரோடு மாவட்டத்தை சார்ந்த பவானிசாகருக்குத் தான் செல்ல வேண்டும். பவானிசாகருக்கு சென்று வர சுமார் 24 கி.மீ., காலை, மாலை வேளைகளில் வனப்பகுதியை கடந்து செல்ல வேண்டும். இதற்காக தினமும் இரண்டு மணி நேரம் பஸ்சில் பயணம் மேற்கொள்ள வேண்டும். இதனால், பல மாணவர்கள் எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விடுகின்றனர். மேற்கொண்டு படிக்க வசதியுள்ள மாணவர்களை அவர்களின் பெற்றோர் பவானிசாகர் ஹாஸ்டலில்  தங்கவைக்கின்றனர். தெங்குமரஹாடா கிராமத்தில் உள்ள பெரும்பாலானோர், குழந்தைகளின் உயர்நிலை கல்விக்காக கிராமத்தை விட்டே இடம் பெயர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தெங்குமரஹாடாவில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு மாநில அரசின் விருது பெற்றுள்ளது. கிராமத்தில் உள்ள மாணவர்களின் நலன் கருதி, இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பதே, இந்த கிராம மக்களின் நெடுநாள் கோரிக்கை. நிறைவேற்றுமா அரசு?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்