உள்ளூர் செய்திகள்

பள்ளி வளாகங்களில் புகைபிடிப்பதை கண்காணிக்க திடீர் ‘விசிட்’

சிவகாசி: பள்ளி, கல்லூரிகளில் உள்ள கேன்டீன், கழிப்பறை, குளியலறைகளில் திடீர் விசிட் செய்து யாராவது புகை பிடித்தால் ‘ஸ்பாட் பைன்’ விதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் சிகரெட் பிடிக்க அக்., 2ம்தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை அமல்படுத்த போலீஸ், பொது சுகாதார துறை, பள்ளி கல்வி துறை, போக்குவரத்து துறை, ரயில்வே, கலால் வரி துறை, தபால்துறை மற்றும் அனைத்து பதிவு பெற்ற அரசு அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரியை சுற்றி 100 மீ., சுற்றளவில் புகையிலை பொருட்கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான நோட்டீஸ் கடைகளுக்கு வழங்கப்பட உள்ளது. நோட்டீஸ் கொடுத்த 7 நாட்களுக்கு பின் அதிகாரிகள் கடைகளை திடீர் ஆய்வு செய்வர். அப்போது புகையிலை பொருட்கள் இருந்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். 3 முறை அபராதம் விதித்தும் தொடர்ந்து விற்பனை செய்தால் கடைக்காரர்கள் மீது வழக்கு தொடரப்படும். இவ்வழக்கில் ஒரு ஆண்டு முதல் 6 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். பொது இடங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். பிடிபட்டால் ‘ஸ்பாட் பைன்’ விதிக்க ரசீது புத்தகங்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் திடீர் விசிட்: சுகாதார துறையினர் தங்கள் பகுதிகளுக்கு உட்பட்ட கல்வி நிறுவனங்களை கிராம பகுதிகளில் வாரத்திற்கு 2 பள்ளிகள் வீதமும், நகர பகுதிகளில் வாரத்திற்கு 5 பள்ளிகள் வீதமும் தணிக்கை செய்ய வேண்டும். கல்வி நிறுவன கேன்டீன்கள், கழிப்பறை, குளியல் அறைகளில் திடீர் விசிட் செய்து புகைப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கும் விபரம் குறித்து 15 நாட்களுக்கு ஒருமுறை அரசுக்கு அறிக்கை அளிக்கும்படி பொதுசுகாதார துறை துணை இயக்குனர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அபராத ரசீது புத்தகத்தில் உண்மை நகல், இரண்டாவது நகல், மூன்றாவது நகல்கள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்