உள்ளூர் செய்திகள்

மீண்டும் தலைதூக்கும் சுரண்டல் சீட்டுகள்: காவல்துறை கவனிக்குமா?

மதுரை: சிறுவர்கள் மனதில் சூது ஆசையை விதைக்கும், லக்கி பிரைஸ் எனப்படும் சுரண்டல் பரிசுகள் விற்பனை, மதுரையில் களை கட்டி வருகிறது. உழைக்கும் வர்க்கத்தை சீரழித்த பெருமை, லாட்டரி சீட்டுகளுக்கு உண்டு. அதனால் தான், அரசு தடை விதித்தது. இருந்தும், வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை, மறைமுகமாக சில இடங்களில் நடந்து வருகிறது. விற்பனை தடையால், "அடுத்து வரும் தலைமுறையினருக்கு, லாட்டரி சீட்டு பற்றிய சிந்தனை, குறைவாகவே இருக்கும்,"என்பது ஆறுதலான விஷயம். அதே சமயம், பிஞ்சுகள் மனதில் நஞ்சை கலக்கும், சூது விளையாட்டுகளும் ஓய்ந்தபாடில்லை. பள்ளிகளுக்கு முன், லக்கி பிரைஸ் விற்கும் கலாசாரம், முன்பு இருந்தது. "பணம் கொடுத்து அதிலுள்ள சீட்டை சுரண்டினால் பரிசு கிடைக்கும்,"என்பது, அதன் பொருள். பள்ளி சிறுவர்களுக்கு, அதன் மீது இருந்த மோகம், சுரண்டல் லாட்டரி பக்கம் திருப்பியது. போலீசாரின் கெடுபிடியால், பள்ளிகள் முன், லக்கி பிரைஸ் விற்பது கட்டுப்படுத்தப்பட்டது. காலங்கள் கடந்த பிறகு, மீண்டும் தலைதூக்கியுள்ளது லக்கி பிரைஸ் கலாசாரம். பரிசு மோகத்தை தூண்டி விடும் டிவி நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக, மீண்டும் "லக்கி பிரைஸ்" புழக்கத்திற்கு வந்துள்ளது. இதில் வருந்தக்கூடிய விஷயம் என்னவென்றால், பள்ளி மாணவர்களை குறிவைத்தே, அதன் விற்பனை நடக்கிறது. தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை இருப்பதால், தெருக்களில் உள்ள பெட்டி கடைகளில், "லக்கி பிரைஸ்" விற்பனை ஜோராய் நடந்து வருகிறது. இம்முறை பணப்பரிசுக்கு பதிலாக, "சில்வர் பாத்திரங்கள், நடிகர்களின் போட்டோக்கள், பென்சில், பேனா," போன்ற, பல விதமான சுரண்டல் பரிசுகளுடன் விற்பனைக்கு வந்துள்ளன. பிஞ்சுகள் மனதில், "சூது" விதைத்து வரும், "லக்கி பிரைஸ்" கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, போலீசார் முன்வர வேண்டும். விடுமுறை நாட்களில், தங்கள் குழந்தைகளின் நடவடிக்கையை, பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்