ஆய்வுக்கு பின்னரே மாணவர்களுக்கு உணவு: வார்டன்களுக்கு உத்தரவு
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டியில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி அருகே அமைந்துள்ள, பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில், 50 பேர் தங்கி, படித்து வருகின்றனர். சமீபத்தில், மாணவியருக்கு வழங்கப்பட்ட காலை உணவில், இட்லி பாதி வேகாமலும், சாம்பார் தண்ணீர் போல காணப்பட்டதுடன், மஞ்சள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருந்தது. காலை உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்தில், மாணவியருக்கு தலைவலி ஏற்பட்டது. ஒரு மாணவி வாந்தி எடுத்த நிலையில், அடுத்தடுத்து மாணவியர் வாந்தி எடுத்ததுடன், வயிற்று போக்கும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, சமையலர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள, அனைத்து பிற்படுத்தப்பட்ட நல விடுதி வார்டன்களுக்கு, நலத் துறை ஆணையர், புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளார். வார்டன்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: * அரசால் நிர்ணயிக்கப்பட்ட அளவில், வாராந்திர உணவு முறைப்பட்டியலின் படி, தரமான உணவு வழங்கப்படுகிறதா என, கண்காணிக்க வேண்டும். * சமையலறை, சுத்தமான முறையில் பராமரிக்க வேண்டும். * சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், எந்தவிதமான கலப்படமுமின்றி, தரமாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். * கடமை உணர்வோடு, வார்டன்கள் தரமான உணவுகளை வழங்க வேண்டும். * ஒவ்வொரு வேளையும், சமைக்கும் உணவின் மாதிரியை சமைத்து முடித்த, இரண்டு மணி நேரம் வரை, ஆய்வுக்காக விடுதியில் வைக்க வேண்டும். * சமைத்த உணவுகளை, வார்டன்கள் ருசி பார்த்த பின்னரே, மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமைத்த உணவை, இரண்டு மணி நேரம் வரை, ஆய்வுக்காக வைக்க வேண்டும் என்ற உத்தரவில், வார்டன்கள் மட்டும் ருசி பார்க்கப் பணிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் ருசி பார்க்க, இரண்டு மணி நேரம் தேவையா என்ற கேள்வி எழுகிறது. இரண்டு மணி நேரத்திற்குள், சமைத்தவை அனைத்தும், ஆறி விடும். மேலும், சமைத்த பின் தான், ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றால், அதன் உள்ளீட்டுப் பொருட்களின் தரத்தை, முன்கூட்டியே அறிய வேண்டும் என்பதில், சமையலர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்பதை, உத்தரவிட்டவர்கள் உணரவில்லை என்றே தோன்றுகிறது. மக்கள் நலனுக்காகத் தீட்டப்படும் எந்தத் திட்டமும், சரியான முறையில் வடிவமைக்கப்படுவதில்லை என்பது, இதன் மூலம் விளங்குகிறது.