உள்ளூர் செய்திகள்

மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சிக்கு ஆசிரியை உடல் தானம்

திண்டுக்கல்: மறைந்த பின்னர், மருத்துவ ஆராய்ச்சிக்காக தனது உடலை தானமாக வழங்க விரும்புவதாக ஓய்வு பெற்ற ஆசிரியை திண்டுக்கல் கலெக்டர் வாசுகியிடம் தெரிவித்துள்ளார். வடமதுரை அருகேயுள்ள எரியோடு பாகாநத்தத்தைச் சேர்ந்தவர் அமிர்தவல்லி(59); பாகாநத்தம் நடுநிலைப் பள்ளியில் உதவி ஆசிரியையாக 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர், தனது மறைவிற்கு பின் தனது உடலை மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள மதுரை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்க விரும்புவதாக திண்டுக்கல் கலெக்டர் வாசுகியிடம் எழுதிக் கொடுத்துள்ளார். இது குறித்து அமிர்தவல்லி கூறியதாவது:நான் சிறுவயதிலேயே சமூக சேவையில் ஆர்வம் கொண்டேன். எனக்கு திருமணமான 58 நாட்களில் எனது கணவர் என்னை விட்டு சென்று விட்டார். இதற்காக நான் மனம் தளரவில்லை; குழந்தைகளும் இல்லை. 1969ம் ஆண்டு ஆசிரியர் பணிக்கு வந்தேன். ஏழை பள்ளி மாணவ, மாணவிகள் கல்விக்கு என்னால் முடிந்த உதவிகள் செய்வேன். ஒரு சொந்த வீடு வைத்திருந்தேன். இதையும் உறவினர்களுக்கு கொடுத்து விட்டேன். எனது உடல் ஆரோக்கியமாக உள்ளது. எனது மறைவிற்கு பின் மருத்துவத்துறை மாணவர்கள் ஆராய்ச்சிக்கு எனது உடலை எடுத்துக் கொள்ள அர்ப்பணிக்கிறேன். இவ்வாறு அமிர்தவல்லி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்