உள்ளூர் செய்திகள்

தேவையில்லாத நடவடிக்கை வேண்டாம்: மாணவர்களுக்கு நீதிபதி அறிவுரை

திருச்சி:  "மாணவர்கள் தேவையில்லாத நடவடிக்கையில் தங்களை உட்படுத்திக் கொள்ளக்கூடாது. படிப்பில் மட்டுமே முழுக்கவனம் செலுத்த வேண்டும்," திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி வேல்முருகன் பேசினார். திருச்சி சட்டக்கல்லூரியில், ஐந்தாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று துவங்கியது. வகுப்புகள் துவக்கவிழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை நீதிபதி வேல்முருகன் பங்கேற்று  பேசியதாவது: "சட்டக்கல்லூரி மாணவர்களின் நடவடிக்கை, மாணவர்களை போல இருக்க வேண்டும். மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். சட்ட மாணவர்களுக்கு படிப்பு தான் முக்கியம். மாணவ பருவத்தை படிப்புக்கு மட்டும் செலவிட வேண்டும். சட்ட மாணவர்களிடம் சமூகம் அதிகம் எதிர்பார்க்கிறது. அதை வீணாக்காமல், படிக்க வேண்டிய காலத்தில் படித்து, நல்ல வக்கீலாக, நீதிபதிகளாக வரவேண்டும். சட்டப்படிப்பு என்பது சமூகம் சார்ந்த படிப்பு. ஐந்து ஆண்டுகள் கடுமையாக உழைத்து படித்தால், ஐம்பது ஆண்டுகள் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மற்ற படிப்புகள் படிப்பவர்கள் போலன்றி, சட்ட மாணவர்கள், தங்களின் உழைப்பை நமது நாட்டுக்கு மட்டுமே தரவேண்டும். மாணவ பருவத்தில் படிப்பில் மட்டுமே மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து மாணவர்கள் தேவையில்லாத நடவடிக்கையில் தங்களை உட்படுத்திக் கொள்ளக்கூடாது. முன்பெல்லாம் சட்டம் படித்தால் வேலை வாய்ப்பு குறைவு. இப்போது சட்டம் படிப்பவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதற்கு ஏற்றார்போல் உங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். எந்த மொழியில் சட்டம் படித்தாலும், ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். பிற மாநிலங்களுக்கு சென்று வாதாட ஆங்கில அறிவு மிக முக்கியம். ஆகையால் தான் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். மாணவ பருவம், கல்லூரி வாழ்க்கை திரும்ப கிடைக்காது. ஆகையால் அதை நன்றாக அனுபவிக்க வேண்டும். அதுவும் நல்ல முறையில் இருக்க வேண்டும். மாணவர்களை கல்லூரிக்கு அனுப்புவதோடு மட்டும், பெற்றோர்களின் கடமை முடிந்து விடுவதில்லை. கல்லூரிகளில் மாணவர்களை பேராசிரியர்கள் பார்த்துக் கொள்வர். அதேநேரம் மாணவர்கள் ஒழுங்காக கல்லூரிக்கு செல்கிறார்களா?, படிப்பில் கவனம் செலுத்துகிறார்களா? என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மற்ற தொழில்களை ஒப்பிடும் போது, சட்டப்படிப்பு மேன்மையானது. அதனால் அதை முறையாக படிக்க வேண்டும். சமுதாயத்தை சீரமைக்கும் பொறுப்பு சட்ட மாணவர்களுக்கு உள்ளது. அந்த எதிர்பார்ப்பும் சமுதாயத்தில் உள்ளது. அதற்கு சட்ட மாணவர்கள் முதலில் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்