உள்ளூர் செய்திகள்

பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்துக்கு ஓரிரு நாளில் தீர்வு

சென்னை: "பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்திற்கு, ஓரிரு நாட்களில் தீர்வு காணப்படும்" என சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார். அரசு மருத்துவக் கல்லூரிகளில், 36 மணி நேரம் தொடர்ந்து பணியாற்ற வேண்டியுள்ளதாகவும், துணை மருத்துவ பணியாளர்களின் வேலையையும் தாங்களே செய்ய வேண்டியுள்ளதாகவும், இதற்கு தீர்வு கோரி பயிற்சி மருத்துவர்கள் போராடி வருகின்றனர். இதற்கு தீர்வு காண, கமிட்டி அமைத்து, "ஷிப்ட்" அடிப்படையில் வேலை வழங்கும் வகையில், சுகாதாரத் துறை செயலர் சமீபத்தில், உத்தரவு வெளியிட்டார். இந்த உத்தரவு, ஸ்டான்லி, மதுரை, வேலூர், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற கல்லூரிகளில் அமல்படுத்தக் கோரி, பயிற்சி மருத்துவர்கள், நேற்று முன்தினம், தர்ணா போராட்டம் நடத்தினர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு வராத தால், சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிகளின் டீன் அலுவலகங்களையும் முற்றுகையிட்டனர். "இம்மாதம், 12ம் தேதிக்குள் தீர்வு காணாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் நடத்துவோம்" என தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர் சங்கம் தெரிவித்தது. இதுகுறித்து, சுகாதாரத் துறை செயலர் ராதா கிருஷ்ணனிடம் கேட்ட போது, "மருத்துவமனையில் சூழலுக்கு ஏற்ப, உத்தரவை அமல்படுத்தியுள்ளனர். ஒருசில இடங்களில், பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து, ஓரிரு நாளில் தீர்வு காணப்படும்," என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்