ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படித்தவர்கள் எம்.டெக். சேர முடியாது!
ஐ.ஐ.டி.,களில் எம்.இ., எம்.டெக்., படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்படும் கேட் (GATE) தேர்வுகளை கணிதம், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படித்தவர்கள் எழுத அனுமதிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இதே பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த எம்.எஸ்சி., மாணவர்கள் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உஸ்மானியா பல்கலைக்கழகம், ஐதராபாத் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேரு பல்கலைக்கழகங்கள் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்புகளை நடத்துகின்றன. மேலும் சில பல்கலைக்கழகங்களும் இதுபோன்ற ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்புகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளன. இந்த நிலையில், இந்தப் படிப்பைப் படித்த மாணவர்கள் மத்திய மனித வளத்துறை வழங்கும் கல்வி உதவித் தொகை பெற தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள். அதேசமயம், எம்.டெக்., படிப்பில் சேர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கேட் நுழைவுத் தேர்வு விண்ணப்ப விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்புகளைப் படித்து வரும் மாணவர்கள் எம்.டெக்., மெக்கானிக்கல், சிவில், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் எம்.இ., படிப்புகளை படிக்க சிரமப்படுவார்கள். எனவே, இந்த மாணவர்கள் இன்ஜினியரிங் இன்டர்டிசிப்பிளினரி படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம். இதனால்தான் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்பு படித்த மாணவர்கள் எம்.டெக்., படிப்புகளில் சேர்க்க அனுமதிப்பதில்லை என தற்போது முடிவு செய்யப்பட்டது என்று சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் சி.வி.ஆர். மூர்த்தி தெரிவித்துள்ளார்.