மாநகராட்சி பள்ளிக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பது எப்போது?
சென்னை: எர்ணாவூரில் சென்னை மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்காததால், பயன்படுத்த முடியாத நிலத்தடி நீரை குடிக்கின்றனர். திருவொற்றியூர் மண்டலம், சென்னை மாநகராட்சி நான்காவது வார்டில் சென்னை மாநகராட்சி உயர்நிலை பள்ளி எர்ணாவூரில் உள்ளது. பள்ளி வளாகத்தில் ஆரம்பப் பள்ளி, உயர்நிலை பள்ளி, அங்கன்வாடி மையங்கள், தனித்தனியாக செயல்படுகின்றன. மொத்தம், 550 பேர் வரை படிக்கும் அந்த வளாகத்தில் குடிக்க குடிநீர் வசதி இல்லை. இதனால், மாணவ, மாணவியர் தமது வீடுகளிலிருந்தே பாட்டில்களில் தண்ணீர் எடுத்து வருகின்றனர். சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காததால், தெரு தெருவாக பணியாளர்கள் குடங்களுடன் அலைகின்றனர். இதுகுறித்து பெயர் கூற விரும்பாத பள்ளி ஆசிரியை ஒருவர் கூறுகையில், "குடிநீர் வசதி இல்லாததால், வெகுதொலைவில் இருந்து வரும் மாணவ, மாணவியர் மிகவும் சிரமப்படுகின்றனர். நிலத்தடி தண்ணீர் உப்பாக இருப்பதால், பயன்படுத்த முடியவில்லை" என்றார்.