தாய்மொழியில் படிக்கும் போது புரிந்து படிக்க வேண்டும்
திண்டுக்கல்: "மாணவர்கள் தாய்மொழியில் படிக்கும் போது புரிந்து படிக்க வேண்டும். அப்போது தான் சிந்தனை வளரும்" என்று தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், திண்டுக்கல்லில் நடந்த ஆட்சிமொழி பயிலரங்கில் கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்தார். பயிலரங்கத்திற்கு, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் சந்திரா முன்னிலை வகித்தார். கலெக்டர் பேசியதாவது: "பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை தமிழில் எழுதி கொடுக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு ஆங்கிலத்தில் பதில் அளிக்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையில், துறை அலுவலர்கள் பதில் அளிக்க வேண்டும். தமிழக அரசின் இணையதளத்தில் உள்ள ஆங்கில சொற்களை, தமிழில் மொழி பெயர்க்கும் அளவுக்கு, இணையதளங்கள் வந்துவிட்டன. மாணவர்கள் தாய்மொழியில் படிக்கும் போது புரிந்து படிக்க வேண்டும். அப்போது தான் சிந்தனை வளரும். அரசு பணிக்கு வருபவர்கள், வரைவுகளை தமிழில் எழுத கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மொழியில் மட்டுமே கோப்புகளை கையாள வேண்டும்," என்றார்.