உள்ளூர் செய்திகள்

‘நாஞ்சில் நாட்டை தாய்த் தமிழகத்தோடு இணைத்த டி.வி.ஆர்.,’

சென்னை: “நாஞ்சில் நாட்டை தாய்த் தமிழகத்தோடு சேர்த்தல், நெல்லை-குமரி ரயில் பாதை திட்டம், தூத்துக்குடி துறைமுகத்தை ஆழ்கடல் துறை முகமாக்கும் திட்டம், கட்டாயக் கல்வித் திட்டத்தை குமரி மாவட்டத்தில் முன் நின்று செயல்படுத்துதல் ஆகிய திட்டங்கள் நிறைவேற டி.வி.ஆர்., காரணமாக இருந்தார்,” என, ‘தினமலர்’ நாளிதழ் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி பெருமிதம் தெரிவித்தார். சென்னையில் நடந்த, ‘தினமலர்’ நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் நூற்றாண்டு நினைவு அஞ்சல் தலை வெளியீட்டு விழாவில், ‘தினமலர்’ ஆசிரியர் டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசியதாவது: இந்நாள், தினமலர் குடும்பத்திற்கு ஒரு பொன்னாள். டி.வி.ஆர்., நூற்றாண்டு விழா நினைவாக தபால் தலை வெளியிட, டாக்டர் கலைஞரின் ஒப்புதலோடு, அமைச்சர் ராஜா அனுமதி கொடுத்தார். இத்தருணத்தில், முதல்வருக்கும், அமைச்சர் ராஜாவுக்கும், ‘தினமலர்’ குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மிகத்தொன்மையான தபால் தந்தித் துறை, 150 ஆண்டுகளாக சேவை புரிந்து வருகிறது. நம் நாட்டில்  இனம், மொழி வாரியாக மக்கள் வாழ்கின்றனர். இந்த மக்களுக்கெல்லாம் தொடர்பு பாலமாக தபால் தந்தித் துறை இருந்து வருகிறது. நாட்டுக்காக பணியாற்றியவர்களுக்கும், தலைவர்களுக்கும், கலைஞர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நினைவு சிறப்பு தபால் தலைகளை வெளியிட்டு, தபால் தந்தித் துறை பெருமைப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் எங்கள் தந்தையாருக்கும் ஒரு இடம் கிடைத்தது குறித்து தினமலர் குடும்பம் மகிழ்ச்சியடைகிறது. இந்தத் துறையினருக்கு சிரம் தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பேராசிரியர் வி.ஐ.சுப்ரமணியம் எங்களது குடும்ப நண்பர்; தந்தையை நன்கு அறிந்தவர்; இருவருக்கும் தமிழ்ப்பற்று காரணமாக நட்பு ஏற்பட்டது. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு. அவர் இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. முற்றிலும் மலையாளம் பேசுபவர்களுக்காக கேரள மாநிலம் 1956ம் ஆண்டு உருவானது. கேரளா உருவாவதற்கு முன், திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானம் என்று பெயருடன் இருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நாஞ்சில் நாடும் இணைந்திருந்தது. தொன்மை காலம் தொட்டே நாஞ்சில் நாட்டில் தமிழ் பேசுபவர்கள் அதிகம் இருந்தனர். அவர்கள் கேரள மாநிலம் உருவாக்கப்பட்ட போது, ‘தாய்த் தமிழகத்துடன் சேர வேண்டும்; மொழி மற்றும் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும்’ என்பதற்காக திருவிதாங்கூர் தமிழ் மக்கள், ஒரு கட்சியைத் துவக்கினர். வேங்கடம் முதல் குமரி வரை என்று தமிழக எல்லை குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லையைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் அந்த இயக்கத்திற்கு சரியான ஆதரவில்லை. சென்னையில் உள்ள பத்திரிகைகளும் சரியாக இது குறித்து செய்தி வெளியிடவில்லை; சென்னையில் இருந்த தலைவர்களும் கண்டுகொள்ளவில்லை. எங்கள் தந்தையாருக்கு தமிழ்ப் பற்று அதிகம். நாகர்கோவில் அருகே உள்ள தேரூர் கிராமத்தில், கவிமணிதேசிக விநாயகம் பிள்ளை இருந்தார். அவரிடம் எங்கள் தந்தைக்கு மிகுந்த மரியாதை உண்டு. அடிக்கடி அவரை சந்தித்து உரையாடி வருவது வழக்கம். எங்கள் தந்தை மனதில், இந்த போராட்டம் வெற்றி பெற வலிமை மிக்க நாளிதழை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இந்த வகையில் தான் 1951ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருவனந்தபுரத்தில் இருந்து, ‘தினமலர்‘ முதல் பிரதி அச்சிட்டு வெளியானது. முதலில் நான்கு பக்க இதழாக சிறியளவில் வெளிவந்தது. கையால் அச்சு கோர்க்கப்பட்டு, சிலிண்டர் மெஷின் மூலம் அச்சடிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் பி.டி.ஐ., செய்தி ஸ்தாபனத்தின் தொடர்பு கிடைத்தது. அதன் மூலம் நாட்டு நடப்புகள், வெளிநாட்டுச் செய்திகள் ஆகியன வெளிப்பக்கங்களில் அச்சிடப்பட்டது. உள்ளே உள்ள இரண்டு பக்கங்களில் திருவிதாங்கூர் போராட்ட செய்திகள் இடம் பெற்றன. போராட்டத்திற்கு ஊதுகுழலாக, ‘தினமலர்‘ மாறியதால், போராட்டம் வலுப்பெற்றது. போராட்டம் நடந்துகொண்டிருந்த காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு முதல்வராக பட்டம் தாணுப்பிள்ளை இருந்தார். போராட்டத்தை ஒடுக்க அவர், ‘தினமலர்‘ மீது பல வழக்குகளை போட்டார். இரவு நேரத்தில், ‘தினமலர்’ அலுவலகத்திற்குள் போலீசார், ஆவணங்களை தேடுவதாக வந்து ஊழியர்களை மிரட்டிவிட்டுச் செல்வர்; மிரட்டலுக்கெல்லாம் எங்கள் தந்தை பணிபவரில்லை. கடந்த 1956ல் கேரள மாநிலம் உருவான பின்னர், தொடர்ந்து திருவனந்தபுரத்தில் பத்திரிகை நடத்துவது சரியில்லை என்பதால், திருநெல்வேலிக்கு அச்சகத்தை மாற்றினார். நெல்லையில் பத்திரிகை அச்சடிக்கப்பட்ட போது அங்கு பி.டி.ஐ., செய்திகளை பெறுவதில் சிக்கல் இருந்தது. நான்கு பக்கங்களை நிரப்ப செய்திகள் அதிகளவில் தேவைப்பட்டன. அந்த காலகட்டத்தில் ரேடியோ செய்திகளைக் கேட்டு பக்கம் நிரப்பப்பட்டு, ‘தினமலர்’ வெளியானது. கடந்த 1951ம் ஆண்டு முதல் 1957 வரை ஆறு ஆண்டுகள், ‘தினமலர்’ நஷ்டத்தில் தான் இயங்கியது. எங்கள் தந்தை சிறந்த நிர்வாகி என்பதால், அதனை சமாளித்து தொடர்ந்து பத்திரிகையை நடத்தினார். விவசாயக் குடும்பத்தில் இருந்து, குடும்பத்திற்கே சம்பந்தமில்லாத தொழிலை நடத்தியது அவரது மனத் துணிச்சலைக் காட்டுகிறது. கடந்த 1959ம் ஆண்டிலிருந்து பத்திரிகை அதிகளவில் விற்பனையாக துவங்கியது. விளம்பரங்களும் அதிகளவில் வந்தன. இதனால், பத்திரிகை லாபத்தில் இயங்கத் துவங்கியது. அவர் இருக்கும் போது ஐந்து நகரங்களில் இருந்து, ‘தினமலர்’ வெளியானது. அவர் மறைவிற்குப் பின் தற்போது 10 நகரங்களில் இருந்து, ‘தினமலர்’ வெளியாகிக் கொண்டிருக்கிறது. சாதாரண மக்களின் செய்திகளை அதிகளவில் வெளியிட வேண்டும் என்று எனது தந்தை விரும்புவார்.  நெல்லை- குமரி ரயில் பாதை முக்கியமான ஒன்று. இதற்காக 60 ஆண்டுகளுக்கு முன் குழு அமைத்து, அதற்கு தலைவர் பொறுப்பையும் வகித்தார். முதல்வர், அமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து, இதுகுறித்து மனுக்களை அளித்துக்கொண்டே இருப்பார். 20 ஆண்டுகள் தொடர்ந்து போராடினார். அந்தப் போராட்டம் வெற்றிபெறக் கூடாது என்பதற்காக, நெல்லை- குமரி பஸ் உரிமையாளர்கள் மறைமுகமாக தடுத்துக்கொண்டே இருந்தனர். 1972ம் ஆண்டில் நெல்லை- குமரி ரயில் பாதை திட்டத்தை, அப்போதைய பிரதமர் இந்திரா துவக்கிவைத்தார். அந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் கலைஞர் முன்னிலை வகித்து சிறப்பித்தார். தூத்துக்குடி துறைமுகம்  மீன்பிடி துறைமுகமாகவே இருந்தது. அதை ஆழ்கடல் துறைமுகமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே இருந்து வந்தது. இந்த கோரிக்கை குறித்து, ‘தினமலர்’ நாளிதழில் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு, அரசின் கவனத்தை ஈர்த்தார். இதன் அடிப்படையில், அரசு நடவடிக்கை எடுத்து மிகப் பெரிய பிரமாண்டமான துறைமுகமாக தூத்துக்குடி மாறியது. தற்போது, தமிழகத்தில் இரண்டாவது பெரிய துறைமுகமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஜாதி வித்தியாசமின்றி எல்லாருக்கும் கல்வி தரவேண்டும் என்பதை அடிப்படைக் கொள்கையாக கொண்டிருந்தார். 1946ம் ஆண்டில் திருவிதாங்கூர் திவானாக இருந்த சர்.சி.பி.ராமசாமி அய்யர் ‘கட்டாய கல்வி திட்டத்தை’ கொண்டு வந்தார். அத்திட்டம், நாகர்கோவிலில் இரண்டு கிராமங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தத் திட்டம் மக்களிடையே சென்றடைய வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட குழுவில் உறுப்பினராக எங்கள் தந்தை இருந்தார். அந்த திட்டம்  சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக தான் இப்போது குமரி மாவட்டம் தமிழகத்தில் கல்வியறிவில் முதலிடம் பெற்றுள்ளது. எங்கள் தந்தை மிகவும் எளிய வாழ்க்கை வாழ்ந்தார். அவர் எப்போதும் நாட்டு மக்களை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். அவர் நினைவாக அஞ்சல்தலை வெளியிடப்படுவது மிகவும் பெருமையாக உள்ளது. இவ்வாறு ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்