கட்டி முடிக்கப்பட்டும் பயன்பாட்டிற்கு வராத அங்கன்வாடி மையம்
இலுப்பூர்: கட்டி முடிக்கப்பட்டு, ஐந்து மாதங்களாகியும், பயன்பாட்டிற்கு வராமல் அங்கன்வாடி மையம் பூட்டியே கிடக்கிறது. கடம்பத்துார் ஒன்றியம், இலுப்பூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம், 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இந்த மையம் கட்டி முடிக்கப்பட்டு, ஐந்து மாதங்களாகியும், இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், அங்கன்வாடி மைய குழந்தைகள், அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள பழைய பழுதடைந்த கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே, புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.