உள்ளூர் செய்திகள்

கட்டடம் பழுதால், கோயிலில் வைத்து நடத்தப்படும் அங்கன்வாடி

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகேயுள்ள பகவதிபாளையம் அங்கன்வாடி கட்டடம் பழுதடைந்ததால், அருகில் உள்ள விநாயகர் கோவிலில், குழந்தைகளை வைத்து பாடம் நடத்துகின்றனர். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள பகவதிபாளையத்தில், அங்கன்வாடி உள்ளது. இதற்கு சொந்தமான கான்கிரீட் கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. இதில், 15 குழந்தைகள் படித்து வருகின்றனர். இம்மையத்தில், ஒரு அங்கன்வாடி பணியாளரும், உதவியாளரும் இருந்தனர். அங்கன்வாடி பணியாளர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றுவிட்டார். இதற்கு, வேறு இடத்திலிருந்து வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் அங்கன்வாடி பணியாளர் வந்து செல்கிறார். இந்த அங்கன்வாடி கட்டடம் பராமரிப்பு இல்லாததால், பழுதடைந்துள்ளது. கான்கிரீட் மேற்கூரையின் சிமென்ட் பூச்சு உடைந்து, கான்கிரீட் கம்பி வெளியே தெரிகிறது. கான்கிரீட் சன்சேடும் இதே நிலையில் உள்ளது. மொத்தத்தில், இக்கட்டடம் எப்பொழுது வேண்டுமானாலும், மேற்கூரையுடன் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால், இந்த கட்டடத்தில், குழந்தைகளை வைத்து பாடம் நடத்துவது இல்லை. இதற்கு மாற்றாக, அருகில் உள்ள விநாயகர் கோவிலில், காலை 8.30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை இம்மையம் நடத்தப்படுகிறது. இக்குழந்தைகளுக்கு, வாரத்தில் திங்கள், புதன், வியாழன் போன்ற நாட்களில் முட்டையும், கலவை சாதமும், மற்ற இரண்டு நாட்களில் சுண்டல், பாசிப்பயிறு, கலவை சாதமும் வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு பாடல், விளையாட்டு போன்றவை கற்றுத் தரப்படுகின்றன. இக்கட்டடம் குறித்து பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இதுகுறித்து குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலருக்கும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக, முழுநேர அங்கன்வாடி பணியாளர் நியமிக்கப்படவில்லை. புதிய கட்டடம் கட்டுவதற்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், குழந்தைகளுக்கு கட்டப்பட்ட கழிப்பிடத்தின் செப்டிக் டேங்க் உடைந்துள்ளதால், இதனை பயன்படுத்தாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால், குழந்தைகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால், இந்த அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் மற்றும் கழிப்பிடத்திற்கான செப்டிடேங்க் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். எப்போது புதிய கட்டடம் கட்டப்படும்?: இதுகுறித்து, கிணத்துக்கடவு குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் மலர்விழி கூறுகையில், "இக்கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டுவது, அங்கன்வாடிக்கு பணியாளர் பற்றாக்குறையாக இருப்பது குறித்தும், மாவட்ட கலெக்டருக்கும், கோவை மாவட்ட குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலருக்கும், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் ஆகியோருக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்