மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மாணவர்கள் ஒப்பாரி போராட்டம்
கோவை: மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஒப்பாரி போராட்டம் நடத்தியதால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் படிக்கும் மாணவர்கள், மங்களுக்கு 100 சதவீதம் வனச்சரகர் பணியிடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசு ஆணை பிறப்பித்த 25 சதவீதம் இட ஒதுக்கீட்டை, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், கல்லூரி நிர்வாகம் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற விடுமுறை அறிவித்தது. மாணவ, மாணவிகளை விடுதியை விட்டு வெளியே செல்லும்படி கூறியது. ஆனால், மாணவ, மாணவிகளும் தங்களது உடைமைகளை எடுத்து வந்தது, கல்லூரி நுழைவு வாயிலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று அனைத்து மாணவ, மாணவிகளும் தங்களது அடையாள அட்டையை ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்டனர். அதில் அடையாள மற்ற வனப்படிப்புக்கு, எதற்கு அடையாள அட்டை, என, வாசகம் எழுதி தொங்கவிட்டுள்ளனர். மேலும் உருவ பொம்மையை வைத்து வனவியல் படிக்கும் மாணவர்களின் நிலை இப்படித்தான் என ஒப்பாரி பாடி நூதன போராட்டம் செய்தனர். இதனால், கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கல்லூரி மூடப்பட்டதால், எவ்வித அடிப்படை வசதியும் இன்றி மாணவ, மாணவிகள் அவதியுடன் போராட்டம் நடத்திவருகின்றனர். கல்லூரி டீன் துரைராசுவிடம் கேட்டபோது, "மாணவர்களின் போராட்டத்தால் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே, விடுதி, வகுப்பு அறைகள், கேண்டின் ஆகியவை மூடப்பட்டுள்ளன" என்றார்.