பெரும்பாலான தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிண்டிகேட் உறுப்பினர்கள்
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் கூட்டத்தில், பெரும்பாலான தீர்மானங்களுக்கு, உறுப்பினர்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். பல்கலையில் துணைவேந்தர் கல்யாணிக்கும், சிண்டிகேட் உறுப்பினர்கள் சிலருக்கும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. சமீபத்தில், இரண்டு உறுப்பினர்களை நியமனம் செய்த துணைவேந்தரின் முடிவிற்கு, கோர்ட் இடைக்கால தடை பிறப்பித்தது. இந்நிலையில் நேற்று சிண்டிகேட் கூட்டம் நடந்தது. துணைவேந்தருடன் கருத்து வேறுபாடு கொண்டுள்ள உறுப்பினர்கள் ராஜராஜன், முரளிபக்ஷித், செல்வக்குமார், வெங்கட்ராமன், நடுநிலை வகிக்கும் உறுப்பினர்கள் பிச்சுமணி, பெரியகருப்பன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல தீர்மானங்களுக்கு எதிர்ப்புகளையும், சில தீர்மானங்களை நிறுத்தி வைக்கவும் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். துணைவேந்தர், உறுப்பினர்களுக்குள் கருத்து மோதல் எழுந்தது. ராமன் கமிட்டி முடிவுக்கான அனுமதி, பயோ டெக்னாலஜி துறையில் பணியாற்றிய கிருஷ்ணசாமியின் பணி நியமனம் மற்றும் கல்வித் தகுதி தொடர்பான முடிவு, பல்கலை ஊழியர்கள் பதவி உயர்வு உள்ளிட்ட தீர்மானங்களுக்கு நிறுத்தி வைப்பு மற்றும் எதிர்ப்புக்களை பதிவு செய்தல் போன்ற முடிவுகள் உறுப்பினர்களால் எடுக்கப்பட்டன. பல்வேறு கமிட்டிகளின் முடிவுகளுக்கும் எதிர்ப்பு கருத்து பதிவு செய்யப்பட்டது. உறுப்பினர்கள் சிலர் வெளிநாட்டு பயணம் சென்றதற்காக பல்கலை மேற்கொண்ட செலவு உட்பட சில தீர்மானங்கள் மட்டும் நிறைவேறின. தொடர்ந்து தள்ளிவைப்பு: தி.மு.க., ஆட்சியில் துணைவேந்தராக கற்பககுமாரவேல் இருந்தபோது பல்கலை பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து நீதிபதி ராமன் கமிட்டி விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்தது. அதுதொடர்பாக சிண்டிகேட்டில் முடிவு செய்யப்படாமல், மூன்று கூட்டங்களாக தொடர்ந்து தள்ளிவைக்கப்படுகிறது.