கணிதத்தில் உயர்ந்த விருதுகளை வென்ற இந்திய வம்சாவளியினர்!
சியோல்: இரண்டு இந்திய வம்சாவளி கணிதவியல் நிபுணர்கள், கணிதத்திற்கான நோபல் பரிசு என்று அழைக்கப்படும் விருதுகளைப் பெற்றுள்ளனர். இப்பரிசை, வேறு நாடுகளைச் சேர்ந்த 2 கணித நிபுணர்களுடன் இணைந்து பெற்றுள்ளனர். தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற கணிதவியல் நிபுணர்களுக்கான 2014ம் ஆண்டு சர்வதேச மாநாட்டில், அவர்கள் இந்த விருதுகளைப் பெற்றுள்ளனர். மஞ்சுல் பார்கவா என்ற இந்திய வம்சாவளி நிபுணர், Fields Medal என்று அழைக்கப்படும் விருதையும், சுபாஷ் கோட் என்ற இந்திய வம்சாவளி நிபுணர், Rolf Nevanlinna என்று அழைக்கப்படும் பரிசையும் பெற்றுள்ளனர். மஞ்சுல் பார்கவா என்பவர், அமெரிக்காவிலுள்ள பிரின்ஸ்டன் பல்கலையில் கணிதவியல் பேராசிரியராக பணிபுரிகிறார். கணிதத்தில், ஜியோமெட்ரி பிரிவில் இவரின் ஆராய்ச்சிக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. சுபாஷ் கோட் என்பவர், அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தில், கணிப்பொறி அறிவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றுபவர். Unique Games குறித்த இவரின் நுட்பமான விவரிப்புக்காக இவருக்கு இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 68வது சுதந்திர தின விழா நடக்கவிருக்கும் இந்த வேளையில், இந்திய வம்சாவளியினர், இத்தகைய உயர்ந்த விருதைப் பெற்றிருப்பது, நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாய் உள்ளதாக, கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.