மாணவர்கள் பாதுகாப்பாக சாலையை கடக்க ஏற்பாடுகள் செய்யப்படுமா?
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில், பள்ளி நேரங்களில், மாணவர்கள் சாலைகளை கடக்கும்போது உரிய பாதுகாப்பு வசதியில்லாததால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. பொள்ளாச்சி நகரம் மற்றும் கிராமப்புறங்களில், கல்வி அறிவு பெறும் வகையில், பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், பயிலும் மாணவ, மாணவியர் ரோட்டை கடக்க எவ்வித விதிமுறைகளும் பின்பற்றப்படாததால், விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. வேகத்தடை இல்லை: பள்ளிகள் அருகே வாகனங்களின் வேகத்தினை கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்கவோ அல்லது பேரிகார்டோ வைக்கப்பட வேண்டும். ஆனால், வேகத்தடை பெரும்பாலான பள்ளிகள் அருகே அமைக்கப்படாததால், வாகனங்கள் வேகமாகச் செல்கின்றன. இதனால், பள்ளி மாணவர்கள் ரோட்டை கடக்க திணறி வருகின்றனர். பாதுகாப்பிற்கு ஆளுமில்லை: பள்ளி நேரத்தில், மாணவ, மாணவியர் பள்ளிக்கு வரும்போது, செல்லும்போது, பாதுகாவலர் அல்லது அலுவலக உதவியாளர் நிறுத்தப்பட்டு, மாணவர்கள் பாதுகாப்பாக ரோட்டை கடக்க உதவலாம். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், இப்பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்கள் ரோட்டை தானாகவே கடக்க வேண்டிய அவலநிலை நீடிக்கிறது. விபத்துகள் தாராளம்: வாகனங்கள் செல்லும் முக்கிய சாலைகள் மற்றும் ரோட்டோரங்களில், அமைந்துள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நித்தம் நித்தம் அச்சத்துடன் ரோட்டை கடக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும், ரோட்டில் வரும் வாகனங்கள் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வருவதால், விபத்துகள் நடைபெறுவது தாராளமாக நடக்கிறது. பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் பள்ளி குழந்தைகள், விளையாட்டுத்தனமாக ரோட்டினை கடக்க ஓட்டம் பிடிக்கும்போது, எதிரே வேகமாக வரும் வாகனங்களால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மாணவர்கள் உயிர் பயத்துடன் சாலையை கடக்கும் நிலையினை மாற்ற உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.