உள்ளூர் செய்திகள்

அமைதியாக நடந்த சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு

புதுடில்லி: பெரும் சர்ச்சைக்கு இடையே, யு.பி.எஸ்.சி.,யால் நடத்தப்படும் சிவில் சர்வீசஸ், முதல்நிலை தேர்வு, நாடு முழுவதும் நேற்று அமைதியாக நடந்தது. தமிழகத்தில், 80 ஆயிரம் பேர் இந்தத் தேர்வை எழுதினர். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்காக, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி.,யால், ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு, சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நடைமுறையை மாற்றி அமைக்கும்படி, வட மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர். தேர்வில், ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மாணவர்களின் போராட்டம் அதிகரித்ததை அடுத்து, ஆங்கில கேள்விகளுக்கான மதிப்பெண், கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என, அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனாலும், மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வை தள்ளுபடி செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் முதல்நிலை தேர்வு நேற்று நடந்தது. ஒன்பது லட்சம் மாணவர்கள், இந்த தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தனர். பிரச்னை எதுவுமின்றி, தேர்வு அமைதியாக நடந்து முடிந்தது. தமிழகத்தில், இந்தத் தேர்வுக்காக, சென்னையில் 145 மையங்களும், கோவையில் 22 மையங்களும், மதுரையில் 20 மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. காலை, 9:30 முதல், 11:30 வரை முதல் தாள் தேர்வும், பிற்பகல், 2:30 முதல் 4:30 மணி வரை, இரண்டாம் தாள் தேர்வுகளும் நடந்தன. விண்ணப்பித்தோரில், 4,000 பேர் தவிர, 80 ஆயிரம் பேர் வரை, ஆர்வமுடன் தேர்வுகளை எழுதினர். தேர்வு மையத்திற்கு, மொபைல் போன், நவீன மின்னணு சாதனங்கள் எடுத்துச் செல்ல அனுமதி தரப்படவில்லை. பறக்கும் படையினரும் தேர்வு மையங்களில் கண்காணித்தனர். சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகளில், பார்வைத் திறன் குறைபாடு உடையோர் தேர்வு எழுதினர். இவர்களுக்கு, கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்