கிடப்பில் போடப்பட்ட சத்துணவு பணியாளர் விண்ணப்ப படிவங்கள்
முருக்கேரி: மரக்காணம் ஒன்றியத்தில் காலியாக உள்ள சத்துணவு பணியாளர்கள் இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்குவது கிடப்பில் போடப்பட்டுள்ளது. மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 56 ஊராட்சியில், 69 அரசு துவக்கப்பள்ளி, 21 நடுநிலைப்பள்ளி, 10 அரசு உயர் நிலைப்பள்ளி, 7 மேல் நிலைப்பள்ளி, 8 நிதியுதவி துவக்கப்பள்ளி, ஒரு நிதியுதவி உயர் நிலைப்பள்ளி, 4 ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி, ஒரு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளி,ஒரு ஆதிதிராவிடர் நல மேல் நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் உள்ள சத்துணவு மையம் மூலம் மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகின்றது. பத்தாண்டுகளாக சத்துணவு பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இரண்டாண்டிற்கு முன் 70 சதவீதம் பேரை சத்துணவு பணியாளராக அரசு தேர்வு செய்தது. எஞ்சியுள்ள இடங்கள் காலியாக இருந்தது. இரண்டாண்டாக 50க்கும் மேற்பட்டவர்கள் ஓய்வுபெற்று விட்டனர். மரக்காணம் ஒன்றியத்தில் உள்ள சத்துணவு மையங்களில் பொறுப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் என 140க்கும் மேற்பட்ட சத்துணவு பணியாளர்கள் இடம் காலியாக உள்ளது. இந்த இடங்களை நிரப்ப கடந்த மாதம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்கள் கிடைக்கும் என அரசு அறிவித்தது. இதுவரை விண்ணப்ப படிவங்கள் வழங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.