சிங்கப்பூர் செல்லும் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள்!
சென்னை: தேசிய அறிவியல் தின, வினாடி - வினா போட்டியில் வெற்றிபெற்ற, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மூவர், சிங்கப்பூர் செல்ல பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சென்னை மாநகராட்சி கல்வி துறை மற்றும் க்வெட் அறிவியல் நிறுவனம் இணைந்து நடத்திய தேசிய அறிவியல் தின போட்டியில், சென்னை மாநகராட்சி பள்ளியை சேர்ந்த 20 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். பல சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில் தகுதி சுற்றில், 93 பள்ளிகளில் இருந்து 279 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர். பல்வேறு சுற்றுகளின் முடிவில் இறுதி சுற்றுக்கு ஆறு அணிகள் தேர்வு செய்யப்பட்டன. கடந்த பிப்ரவரி மாதம் இறுதி சுற்று போட்டி நடந்தது. இதில், அதிக புள்ளிகளை பெற்ற முதல் மூன்று அணிகள் வெற்றி கோப்பையை வென்றதுடன், சிங்கப்பூர், கோல்கட்டா, பெங்களூரு அறிவியல் மையங்களை சுற்றி பார்க்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர். அரும்பாக்கம், நடுநிலை பள்ளியை சேர்ந்த சின்னையா, லலிதா ஜீவானந்தம் ஆகியோர் சிங்கப்பூருக்கும், ஏரிக்கரை நடுநிலைப் பள்ளியை சேர்ந்த ஜானகி, ரோஜா, கார்த்திகேயன் ஆகியோர் கோல்கட்டாவில் உள்ள அறிவியல் மையத்திற்கும், வடபழனி மாநகராட்சி நடுநிலை பள்ளியை சேர்ந்த ரமணா, மோகன்ராஜ், சங்கீதா ஆகியோர் பெங்களூருவில் உள்ள அறிவியல் மையத்திற்கும் செல்லும் வாய்ப்பு பெற்றுள்ளனர். இதற்கான பாஸ்போர்ட் மற்றும் பரிசுகளை ரிப்பன் மாளிகையில் மேயர் சைதை துரைசாமி, மாணவர்களிடம் வழங்கினார். கமிஷனர் விக்ரம் கபூர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.