உள்ளூர் செய்திகள்

தொழிற்கல்வி ஆசிரியர்களின் சம்பளம் குறைப்பிற்கு உயர்நீதிமன்றம் தடை

சென்னை: தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைப்பு செய்து, நிதித்துறை பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த, தொழிற்கல்வி ஆசிரியர்கள் ஏழு பேர், தாக்கல் செய்த மனு: எங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் இல்லாததால், 5,400 ரூபாய், தர ஊதியத்துடன், 39,100 ரூபாய் பெற, தகுதி உள்ளது. ஆனால், எங்களுக்கு, 4,800 ரூபாய், தர ஊதியத்துடன், 34,800 ரூபாய் வழங்க, கடந்த ஆகஸ்ட் மாதம், நிதித்துறை உத்தரவிட்டுள்ளது. நாங்கள், 5,400 ரூபாய், தேர்வு நிலை ஊதியம் பெற உரிமை உள்ளது. ஆனால், எங்களுக்கு அது மறுக்கப்படுகிறது. நிதித்துறையின் கடிதத்தை வைத்து, எங்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் சம்பளத்தை, திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை, தலைமை ஆசிரியர்கள் எடுக்கின்றனர். எனவே, தற்போது வழங்கப்படும் ஊதிய விகிதத்தை குறைக்கவும், வழங்கப்பட்ட பணத்தை பிடித்தம் செய்யவும், தடை விதிக்க வேண்டும். நிதித்துறையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்தார். சம்பள குறைப்பு செய்த நிதித்துறையின் உத்தரவுக்கு, நீதிபதி சுந்தரேஷ் தடை விதித்தார். மனுவுக்கு, எட்டு வாரங்களில் பதிலளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்