பள்ளிக்கு செல்லும் சாலையில் வழிந்தோடும் கழிவு நீர்
பந்தலூர்: பந்தலூர் அருகே பொன்னானி ஜி.டி.ஆர்., பள்ளிக்கு செல்லும் சாலையில், வழிந்தோடும் கழிவு நீரால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பந்தலூர் அருகே பொன்னானியில் ஜி.டி.ஆர். நடுநிலைப்பள்ளி உள்ளது. பள்ளி அருகே சாலையை ஒட்டிய குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் முழுவதும் சாலையில் வழிந்தோடுகிறது. பள்ளிக்கு அதிகளவில் பழங்குடியின மாணவர்கள் வந்து செல்லும் நிலையில், செருப்பு அணியாத பல மாணவர்கள், இந்த கழிவுநீரில் நடந்து செல்வதால் எளிதாக நோய் பரவ வாய்ப்புள்ளது. இந்த பிரச்னை குறித்து, இப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி மற்றும் சுகாதார துறைக்கு புகார் தெரிவித்தும் கண்டுக்கொள்ளவில்லை. எனவே, சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க, சுகாதார துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.