குண்டும் குழியுமான சாலைகளால் பள்ளி மாணவர்கள் அவதி
திருத்தணி: நகராட்சி சாலை, குண்டும், குழியுமாக உள்ளதால், பள்ளி மாணவர்கள் மற்றும் நகரவாசிகள் அவதிப்படுகின்றனர். திருத்தணி நகராட்சி, அரக்கோணம் சாலையில் அமைந்துள்ளது ஜெ.ஜெ.நகர். இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதுதவிர, இங்கு, சி.எஸ்.ஐ., உயர்நிலைப் பள்ளியும் இயங்கி வருகிறது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அப்பகுதிவாசிகள், அரக்கோணம் சாலை வழியாக திருத்தணி பஜாருக்கு வந்து செல்ல வேண்டும். இந்நிலையில் அரக்கோணம் சாலையில் இருந்து, ஜெ.ஜெ.நகர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. சாலையில் ஒரு அடி ஆழத்திற்கு மேல் பள்ளங்கள் உள்ளதால், மழைநீர் தேங்கி நிற்பதால், மாணவர்கள் மற்றும் அப்பகுதிவாசிகள் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே, மாணவர்கள் நலன் கருதி, நகராட்சி நிர்வாகம் பள்ளங்களாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.