ஒடிசா பள்ளியில் வாஜ்பாய் மரணம் என விடுமுறை
பாலசோர்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்துவிட்டதாக அறிவித்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பள்ளிக்கு ஒரு நாள் விடுமுறையும் அறிவித்த, ஒடிசா மாநில பள்ளி தலைமையாசிரியர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடந்த ஜூலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமிற்கு மரியாதை செலுத்துவதாக கூறி, அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்த சமயத்தில் உயிருடன் இருந்த கலாமுக்கு, மலரஞ்சலி செலுத்திய ஒரு வாரத்திற்குள், அவர், திடீரென இறந்தார். இந்நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை, ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டத்தில் உள்ள, ஒரு ஆரம்ப பள்ளியின் தலைமையாசிரியர் கமல்காந்த் தாஸ், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இறந்து விட்டதாக அறிவித்ததுடன், பள்ளிக்கு விடுமுறையும் அளித்த சம்பவம், அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுகுறித்து உள்ளூர் மக்கள், மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து கமல்காந்த் தாசை,சஸ்பெண்ட் செய்து, அவர் மீது விசாரணை நடத்த, கலெக்டர் சனாதன் மல்லிக் உத்தரவிட்டுள்ளார்.