வகுப்பை புறக்கணித்து மனு வழங்க வந்த மாணவர்கள்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த திப்பனப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி கட்டடத்தை திறக்கக்கோரி, பள்ளி மாணவர்கள், 60க்கும் மேற்பட்டோர், நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து விட்டு, கலெக்டர் ராஜேஸிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி அடுத்த தீர்த்தம், வேப்பனஹள்ளி, பதிமடுகு, நாச்சிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், திப்பனப்பள்ளி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறோம். மாதிரிப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு, இதுநாள் வரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால், மாதிரிப்பள்ளி மாணவ, மாணவியர் அனைவரும், குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறோம். குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வகம் இல்லாததால், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர், செய்முறை பயிற்சி பெற முடியாமல், தவித்து வருகின்றனர். அத்துடன், நான்கு வழிச்சாலையை கடந்து பள்ளிக்கு செல்லவே அச்சமாக உள்ளது. தீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, குருபரப்பள்ளிக்கு வர காலை, 11 மணிக்கு மேலாகிறது. எனவே, மாணவ, மாணவியரின் நலன் கருதி, திப்பனப்பள்ளியில் உள்ள அரசு மாதிப்பள்ளி புதிய கட்டடத்தை உடனடியாக திறக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மனு அளிக்க வந்த தகவலை அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தமிழரசு, மாணவர்களை சமாதானம் செய்து, பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.