உள்ளூர் செய்திகள்

பீதியை கிளப்பிய குண்டு மிரட்டல்; பள்ளிகள் மூடல்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாக தகவல் பரவியதால், பீதி அடைந்த பெற்றோர், பள்ளிகளில் இருந்த குழந்தைகளை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அழைத்து சென்றனர். காஞ்சிபுரம் மாவட்ட, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று காலை, பேசிய மர்ம நபர், கோவளத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளோம் என, கூறி, தொடர்பை துண்டித்து விட்டான். இதையடுத்து, கேளம்பாக்கம் போலீசார், அப்பள்ளிக்கு சென்று, தலைமை ஆசிரியை வசந்தகுமாரியிடம், மாணவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு தெரிவித்துள்ளனர். பின், மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி முழுவதும் சோதனை நடத்தினர்; ஒரு மணி நேர சோதனைக்கு பின் புரளி என தெரிய வந்தது. இதற்கிடையே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து இருப்பதாக, &'பேஸ்புக், வாட்ஸ் ஆப்&' ஆகிய சமூக வலைதளங்களில், காட்டுத்தீ போல் தகவல் பரவ, பெற்றோர் பீதி அடைந்தனர். நேற்று காலை, 11:00 மணி அளவில் பள்ளிகளில் குவிந்தனர். வெடிகுண்டு மிரட்டல் ஏதும் வரவில்லை என, பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்த போதிலும், வலுக்கட்டாயமாக குழந்தைகளை வெளியேற்றுமாறு கோஷம் போட்டனர். இதனால் பல இடங்களில், பள்ளி நிர்வாகத்திற்கும், பெற்றோருக்கும் மோதல் ஏற்பட்டது; பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து, ராயப்பேட்டையில் துவங்கி, மயிலாப்பூர், சாந்தோம், அடையாறு, நீலாங்கரை, பெசன்ட் நகர், கொட்டிவாக்கம், திருவான்மியூர், பாலவாக்கம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பள்ளிகளுக்கும், காஞ்சி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில பள்ளிகளுக்கும் தற்காலிக விடுமுறை விடப்பட்டது. இதனால், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பெற்றோர் மற்றும் மாணவ, மாணவியர் வீடுகளை நோக்கி சென்றதால், சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடும் நடவடிக்கை சென்னை மாநகரில் எந்த ஒரு பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் வரவில்லை. வாட்ஸ் ஆப் வதந்திகளை பொதுமக்கள், பள்ளி நிர்வாகத்தினர் நம்ப வேண்டாம். இதுபோன்று வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ராஜேந்திரன், போலீஸ் கமிஷனர், சென்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்