உள்ளூர் செய்திகள்

ஐ.ஏ.எஸ்., ஆக ஆசைப்படும் பெண் ஆட்டோ ஒட்டுநர்

பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூரில், போக்குவரத்து நெரிசலான சாலைகளில், ஆட்டோ ஓட்டும், 22 வயது இளம்பெண், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வருகிறார். பெங்களூரைச் சேர்ந்த இளம்பெண் எல்லம்மா, குடும்ப சூழ்நிலையால், 18 வயதில் திருமணம் செய்தார். காலம் செய்த கோலத்தால், கணவரின்றி, இரண்டரை வயது கைக்குழந்தையுடன் தவித்த எல்லம்மா, மைத்துனரிடம் ஆட்டோ ஓட்ட கற்றுக்கொண்டார். கவுரவமாக வாழ வேண்டுமென்ற உறுதியுடன் இருந்த இவர், ஆட்டோ வாங்க வசதியின்றி, நாள் வாடகைக்கு ஆட்டோவை பெற முயன்றார். பெண் என்பதால், அவருக்கு ஆட்டோவை வாடகைக்கு தர மறுத்தனர். கடைசியில், ஒரு ஆட்டோ மெக்கானிக், இவருக்கு, நாள் ஒன்றுக்கு, 130 ரூபாய் வாடகைக்கு ஆட்டோவை தந்தார். நெரிசலும், பரபரப்பும் மிக்க பெங்களூரு நகர சாலைகளில், துணிச்சலாகவும், சாதுரியமாகவும் ஆட்டோ ஓட்டி வரும் எல்லம்மா, ஒரே நேரத்தில், பி.யு.சி., தேர்வுக்கும், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கும் தயாராகி வருகிறார். ஆட்டோ சவாரி முடிந்து, ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான புத்தகங்களை படித்து வருகிறார். புத்தகமும், கையுமாக வலம் வரும் எல்லம்மாவின் ஆட்டோவில் ஏறும் பயணிகள், அவரின் லட்சியம் பற்றி கேட்டு வியக்கின்றனர்; ’எல்லம்மா நிச்சயம், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வு பெறுவார்’ என, வாழ்த்திச் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்