பிளிப்கார்ட் செயல்பாட்டால் கலங்கும் ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., மாணவர்கள்
புதுடில்லி: நாட்டின் பிரபல மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்வி மையங்களாக, ஐ.ஐ.எம்., மற்றும் ஐ.ஐ.டி.,க்கள் திகழ்கின்றன. இவற்றில் படித்த பல மாணவர்கள், இந்தியா மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும், பிரம்மாண்ட நிறுவனங்களில், உயர் பதவிகளில் கோலோச்சுகின்றனர். இந்தியாவின் முன்னணி இ - காமர்ஸ் நிறுவனமான, பெங்களூரைச் சேர்ந்த பிளிப்கார்ட், மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப பணிகளுக்காக, ஐ.ஐ.எம்., மற்றும் ஐ.ஐ.டி.,க்களில் படித்து, தேர்வான மாணவர்களை தேர்வு செய்திருந்தது. ஆனால், அவர்கள் பணியில் சேரும் தேதியை, ஆறு மாதங்களுக்கு தள்ளி வைப்பதாக, அந்த நிறுவனம் திடீரென அறிவித்தது. இதைத் தொடர்ந்து, சில ஆரம்பநிலை, &'ஸ்டார்ட் அப்&' நிறுவனங்கள், புதிதாக தேர்வாகும் ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத் தொகையை வெகுவாக குறைக்கத் துவங்கி உள்ளன. இதனால், ஐ.ஐ.எம்., மற்றும் ஐ.ஐ.டி., மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். பிளிப்கார்ட் நிறுவனத்தின் நடவடிக்கையால் ஏற்பட்ட அசாதாரண சூழலை அடுத்து, ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., கல்வி மையங்கள், தம் மாணவர்களுக்கு, எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் துவங்கியுள்ளன. கல்வி மைய வளாகங்களில், &'கேம்பஸ் இன்டர்வியூ&' மூலம் மாணவர்களை தேர்வு செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், பணி நியமன கொள்கையை திட்டவட்டமாக வரையறுத்துக் கொள்ள வேண்டுமென, அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தாமதம் ஏன்?ஐ.ஐ.எம்., மற்றும் ஐ.ஐ.டி.,க்களில், கேம்பஸ் இன்டர்வியூ மூலம், பிளிப்கார்ட் நிறுவனம், 45 மாணவர்களை தேர்வு செய்திருந்தது. இவர்கள், பணியில் சேரும் நாளை, ஆறு மாதங்களுக்கு, பிளிப்கார்ட் தள்ளி வைத்துள்ளது. நிர்வாக ரீதியில் நடைபெறும் மாற்றங்களால், தாமதம் ஏற்படுவதாக, பிளிப்கார்ட் கூறுகிறது. தாமதத்துக்கு இழப்பீடு அளிக்கவும் அந்நிறுவனம் மறுத்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.