உள்ளூர் செய்திகள்

விளையாட்டு விடுதியில் சேர தேர்வு; கலெக்டர் அறிவிப்பு

விழுப்புரம்: விளையாட்டு விடுதியில் தங்கி படிப்பதற்கான தேர்வு வரும் 17ம் தேதி முதல் துவங்குகிறது. விழுப்புரம் கலெக்டர் லட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2016-17ம் ஆண்டிற்கான விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெறுவதற்கு சேர்க்கை நடக்கிறது. இதில், தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள், பங்கேற்றவர்கள் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் முதல் 3 இடங்களில் பதக்கம் வென்றவர்கள், பங்கேற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான இரண்டாம் கட்ட மாநில அளவிலான தேர்வுகள் வரும் 17, 18, 19 தேதிகளில், சென்னை ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கம் ஆகிய இடங்களில் நடக்கிறது. போட்டிகள்: தடகளம், கூடைப்பந்து, பேட்மிட்டன், குத்துச்சண்டை, கால்பந்து, கத்திச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், மேஜைப்பந்து, டென்னிஸ், ஜூடோ போட்டிகள் 7ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு 17ம் தேதி நடக்கிறது. பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு 18ம் தேதியும்; மாணவியர்களுக்கு 19ம் தேதியும் தினமும் காலை 8:00 மணிக்கு சென்னையில் தேர்வு நடக்கிறது. கபடி, கைப்பந்து, வளைகோல் பந்து, நீச்சல், கையுந்து பந்து, பளுதுாக்குதல் போட்டிகளில் 7ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு 17ம் தேதியும்; பிளஸ் 1 படிக் கும் மாணவர்களுக்கு 18ம் தேதியும்; மாணவிகளுக்கு 19ம் தேதியும்; காலை 8:00 மணிக்கு திருவண்ணாமலையில் தேர்வு நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள், www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, அசல் சான்றிதழ்களுடன், போட்டி தேதியன்று காலை 8:00 மணியளவில் உரிய மையங்களில் ஆஜராக வேண்டும். இவ்வாறு கலெக்டர் லட்சுமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்