உள்ளூர் செய்திகள்

பெண்கள் பள்ளியில் வித்யாஞ்சலி நிகழ்ச்சி; கவர்னர் பங்கேற்பு

புதுச்சேரி: சவுரிராயலு நாயக்கர் அரசு பெண்கள் பள்ளியில் நடந்த வித்யாஞ்சலி நிகழ்ச்சியில், கவர்னர் கிரண்பேடி பங்கேற்று மாணவிகளுக்கு நீதிக்கதை கூறி கலந்துரையாடினார். மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வித்யாஞ்சலி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தில் நாடு முழுவதும் இருந்தும் 100 பள்ளிகள் தேர்வு செய்து, அப்பள்ளிகளில் விருப்பமுள்ள தன்னார்வலர்கள் கலை, விளையாட்டு திறமைகளை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம். மாணவர்களுக்கு கற்றுத்தரும் நிகழ்ச்சி வீடியோ பதிவு செய்து, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். புதுச்சேரியில் சவுரிராயலு நாயக்கர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இத்திட்டத்தில் சேர்ந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் சேர்ந்துள்ள சவுரிராயலு பள்ளி மாணவிகளுக்கு நீதி கதைகள் கூறும் நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பேடி நேற்று பங்கேற்றார். நுாலக அறையில் ஏற்பாடு செய்திருந்த வித்யாஞ்சலி நிகழ்ச்சியில், கவர்னர் கிரண்பேடி பங்கேற்று மாணவிகளுக்கு நீதிக்கதை கூறி கலந்துரையாடினார். முன்னதாக, நான் யார் என்று தெரிகிறதா என கேள்வி எழுப்பினார். அப்போது ஒரு மாணவி நீங்கள் புதுச்சேரியின் கவர்னர் என கூறியதுடன், உங்களைப்பற்றி 7ம் வகுப்பு ஆங்கில பாடத்தில் இடம்பெற்றுள்ளது என தெரிவித்தார். கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறுகையில், குழந்தைகளை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நகரப் பள்ளி மட்டும் இன்றி கிராமப்பகுதி பள்ளிகளுக்கும் செல்ல உள்ளேன். தினமும் பகல் 12:00 மணி முதல் 1:00 மணி வரை அரசு மருத்துவமனை, ரேஷன் கடைகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்வேன். அரசு பள்ளிகள் சிறந்தது, தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்கலாம் என பெற்றோர் எண்ணும் அளவிற்கு பள்ளியின் தரத்தை உயர்த்துவதே குறிக்கோள் என்றார். பள்ளியில் அசுத்தம் பள்ளி சுவற்றில் உள்ள அழுக்கை சுட்டிக்காட்டிய கவர்னர், ஆசிரியர்கள் இந்த அழுக்குகளை சுத்தம் செய்ய ஆரம்பித்தால், மாணவர்கள் உங்களை பின்பற்றி சுத்தம் செய்வர். வாரத்தில் ஒரு நாள் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்